தமிழ்நாடு

tamil nadu

விரைவில் வருகிறது 'ட்விட்டர் பேமன்ட்ஸ்' வசதி!

By

Published : Nov 10, 2022, 3:00 PM IST

ட்விட்டர் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியைக்கொண்டு வர எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து விளம்பர நிறுவனங்களுடன் மஸ்க் ஆலோசனை மேற்கொண்டார்.

Musk
Musk

சான் பிரான்சிஸ்கோ: உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றது முதலே, பல அதிரடியான நடவடிக்கைகளை மஸ்க் மேற்கொண்டு வருகிறார்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு பெரும் தொகையை கடன் வாங்கினார். தனது டெஸ்லா நிறுவனத்தின் சில பங்குகளையும் விற்பனை செய்தார். கடன் சுமை அதிகமாக இருப்பதால், வருவாய் ஈட்டப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ட்விட்டர் நிறுவனத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் உள்பட ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கினார். ட்விட்டரின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்க மாதம் 8 டாலர் கட்டணம் நிர்ணயித்தார். இவரது கட்டுப்பாடுகளால் பல்வேறு விளம்பர நிறுவனங்கள் ட்விட்டரில் முதலீடு செய்வதை நிறுத்தினர்.

இந்த நிலையில், டிஜிட்டல் பேமன்ட்ஸ் சந்தையில் நுழைய மஸ்க் முடிவு செய்துள்ளார். ட்விட்டர் தளம் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியைக் கொண்டு வர இருக்கிறார். இதுகுறித்து நேற்று(நவ.9) விளம்பர நிறுவனங்களுடன் காணொலி வாயிலாக மஸ்க் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளை வைத்துள்ள பயனர்கள், ட்விட்டர் மூலமாக மற்றொரு பயனருக்கு பணப்பரிவர்த்தனை செய்ய ஊக்குவிப்பதாகவும், ட்விட்டரின் புளூ டிக் சந்தாதாரர்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி இந்த சேவையில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த வசதி எவ்வளவு எளிமையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பயனர்கள் அதைப்பயன்படுத்தக்கூடும் என்று தெரிவித்தார். இதில் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை பற்றி மஸ்க் எதுவும் பேசவில்லை.

சீனாவின் WeChat போலவே X.com என்ற சூப்பர் செயலியை உலகளவில் சந்தைப்படுத்த வேண்டும் என்று விரும்புவதாக மஸ்க் ஏற்கெனவே கூறியிருந்தார்.

இதையும் படிங்க:பிறரின் பெயர்களில் ஆள்மாறாட்டம் செய்யும் ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் - எலான் மஸ்க்!

ABOUT THE AUTHOR

...view details