தமிழ்நாடு

tamil nadu

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தாக்குதல் - உலகத் தலைவர்கள் கருத்து!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 10:19 AM IST

Israel attack: ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு இஸ்ரேல் மீது நடத்திய குண்டு வீச்சு தாக்குதலை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Israel attack
இஸ்ரேல் தாக்குதல் - உலக தலைவர்களின் கருத்து

இஸ்ரேல்: பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையிலான எல்லைப் பிரச்னை நூற்றாண்டுகளைத் தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய காசா நகரை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு வருகின்றன. இந்நிலையில், பாலஸ்தீனத்தை அடிப்படையாகக் கொண்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு இஸ்ரேலில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தின.

இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய காசா உள்ளிட்ட பகுதியின் மீது ஏறத்தாழ 5 ஆயிரம் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த கொடூர தாக்குதலில் தற்போது வரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும், சுமார் 300 பேர் உயிரிழந்ததாகவும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹல் (Pushpa Kamal Dahal), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy), ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese), இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் தங்களின் கருத்துக்களை 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி: "இஸ்ரேலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளது. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் ஒற்றுமையாகவும், பக்கபலமாகவும் நாங்கள் நிற்கிறோம்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹல்:இஸ்ரேலில் நடந்த தீவிரவாத தாக்குதலை நான் கண்டிக்கிறேன். நேபாளிகளில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில், காயமடைந்த நேபாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: இஸ்ரேலின் நகரங்களில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் பொழிகின்றன. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் வீரர்களை மட்டுமல்ல, வீடுகள் இன்றி தெருக்களில் வாழும் பொதுமக்களையும் கொன்றுள்ளனர். இஸ்ரேல் மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கிறது.

மேலும், இஸ்ரேலுக்கு விரோதமான எந்தக் கட்சியும் இந்தத் தாக்குதலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் தருணம் இதுவல்ல. இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் ஆதரவு உறுதியானது. இஸ்ரேலில் பயங்கரமான ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலில் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்: இஸ்ரேலின் குடிமக்களுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. ஹமாஸின் இந்த தாக்குதல் கோழைத்தனமானது மற்றும் மோசமானது. இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள முழு உரிமை உண்டு. நாங்கள் இஸ்ரேலின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம், இஸ்ரேலில் உள்ள பிரிட்டிஷ் மக்கள் பயண ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.

உக்ரைன் அதிபர் வெலோடிமிர் ஜெலன்ஸ்கி:இஸ்ரேலின் தீவிரவாத தாக்குதலில் உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி திரும்பும். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்பவர்கள், உலகிற்கு எதிரான குற்றத்தைச் செய்கிறார்கள். இந்த நேரத்தில் உலகம் ஒற்றுமையாக நிற்க வேண்டும்.

ஆபத்தான பகுதிகளில் இருக்கும் அனைத்து உக்ரேனிய குடிமக்களும் உள்ளூர் பாதுகாப்பு சேவைகளால் வழங்கப்படும் அனைத்து உத்தரவுகளையும் கவனமாக கடைபிடிக்க வேண்டும் மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள். உக்ரேனிய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள எங்கள் தூதரகம் எந்த சூழ்நிலையிலும் உதவ தயாராக உள்ளன. ஒவ்வொரு உயிரும் மதிப்புமிக்கது. அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறோம்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்:இஸ்ரேலின் நகரங்கள் மற்றும் அதன் பொதுமக்கள் மீது ஹமாஸ் நடத்திய கண்மூடித்தனமான மற்றும் வெறுக்கத்தக்க தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த நேரத்தில் இஸ்ரேலுடன் ஆஸ்திரேலியா ஆதரவாக நிற்கிறது. இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

இதையும் படிங்க:ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details