தமிழ்நாடு

tamil nadu

கரோனா பரிசோதனை மையம் - கரோனா பாதுகாப்பு மையங்கள் எண்ணிக்கை குறைப்பு

By

Published : Jul 3, 2021, 4:03 PM IST

கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் முழுமையாக நீங்காத நிலையில், கரோனா பரிசோதனை மையம், கரோனா பாதுகாப்பு மையங்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி நிர்வாகம் குறைத்துள்ளது.

கரோனா பரிசோதனை மையம்
கரோனா பரிசோதனை மையம்

சென்னை: சென்னையில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் முழுமையாக நீங்காத நிலையில், கரோனா பரிசோதனை மையம், கரோனா பாதுகாப்பு மையங்கள் எண்ணிக்கையை மாநகராட்சி நிர்வாகம் குறைத்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கரோனா பரவல், படிப்படியாகக் குறைந்துவருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி உள்பட்ட இடங்களில் கரோனா பரிசோதனை மையங்கள், கரோனா பாதுகாப்பு மையங்களை மாநகராட்சி தற்காலிகமாக மூடிவருகிறது. லேசான கரோனா அறிகுறி உள்ளவர்கள் தங்கி சிகிச்சைப் பெற்றுவந்த 32 கரோனா பாதுகாப்பு மையங்களில் 14 மையங்கள் மூடப்பட்டுள்ளன.

கரோனா உறுதியான பின் நோயின் தீவிரம் குறித்து பரிசோதனை செய்துவந்த 15 கரோனா சிறப்பு பரிசோதனை மையங்களில் 9 பரிசோதனை மையங்களையும் சென்னை மாநகராட்சி மூடியுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளதா எனத் தினந்தோறும் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளும் களப்பணியாளர்கள் எண்ணிக்கையையும் 12 ஆயிரத்தில் இருந்து 6,300ஆக மாநகராட்சி குறைத்துள்ளது.

அதுமட்டுமின்றி கரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க கரோனா ஆலோசனை மையத்தில் மருத்துவ இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

இவர்களில் 200 தற்காலிக மருத்துவர்களும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கரோனா முதல் அலையின் நோய்த்தொற்று குறைந்ததைக் கணக்கிட்டு மாநகராட்சி சார்பாக தொடங்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு மையங்கள், பரிசோதனை மையங்களும் மூடப்பட்டன.

இதனால் இரண்டாம் அலை பரவத் தொடங்கியபோது மீண்டும் கட்டமைப்பை உருவாக்க நீண்ட நாள்கள் எடுத்துக்கொண்டதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

தற்போது கரோனா மூன்றாவது அலை கண்டிப்பாக தாக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துவரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details