தமிழ்நாடு

tamil nadu

விடாமுயற்சி படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியீடு.. வைரலாகும் அஜித் புகைப்படங்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 6:16 PM IST

Vidamuyarchi Update: மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ள நிலையில் படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளனர்.

நாளை தொடங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு
நாளை தொடங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரது படங்கள் வெளியாகும் தினத்தை அவரது ரசிகர்கள் பண்டிகை நாளாகக் கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக இவரது படம் குறித்த அப்டேட்டுகளும், அதற்காக அவரது ரசிகர்கள் செய்யும் செயல்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாகும்.

முன்னதாக இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'துணிவு'. இப்படம் பல வகையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் ரீதியாகச் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் அப்படத்திலிருந்து விலகியதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் பகிரப்பட்டன.

அதன் பின்னர் நடிகர் அஜித் குமார், தனது பைக்கில் உலக சுற்றுலா கிளம்பியதை அடுத்து, அவரது அடுத்த படத்தைக் குறித்து எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது. தொடர்ந்து சில மாதங்கள் கழித்து, லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டன.

அதை உறுதிப்படுத்தும் வகையில், லைகா நிறுவனம் நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்தது.

ஆனால் அதன்பிறகு படத்தைக் குறித்து எந்தவித தகவலும் இல்லாமல் இருந்தது. அதன் பின்னர் ரசிகர்கள் 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட்டுக்காக காத்திருப்பதைப் போன்ற மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன. அதனைத் தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ள நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளனர்.

விரைவில் படப்பிடிப்பை முடித்து அடுத்த வருடத் தொடக்கத்தில் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர்கள் அஜித் மற்றும் த்ரிஷா ஆகியோர் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: உங்க ஆர்டர் ரெடி சுவைக்க தயாராகுங்க.. 'லியோ' டிரைலர் குறித்து படக்குழு வெளியிட்ட அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details