தமிழ்நாடு

tamil nadu

"படத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி எனக்கு துணையில்லை"- நடிகர் சிலம்பரசன்!

By

Published : Mar 19, 2023, 8:12 AM IST

Updated : Mar 19, 2023, 10:24 AM IST

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் ஓபலி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு, தனக்கு படத்திலும் ஜோடி இல்லை, வாழ்க்கையிலும் ஜோடியில்லை என தெரிவித்தார்.

The audio launch of the Pathu Thala movie starring actor Simbu was held in Chennai
நடிகர் சிம்பு நடித்துள்ள பத்துதல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது

நடிகர் சிம்பு நடித்துள்ள பத்துதல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது

சென்னை: சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், டி.ராஜேந்தர், ஆரி, பிரியா பவானி சங்கர், சந்தோஷ் பிரதாப், இயக்குனர் சுதா கொங்கரா, சினேகன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், "இப்படத்தில் நான் பணியாற்ற ஒப்புக் கொண்டதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் சிம்பு. இயக்குனர் கிருஷ்ணா இயக்கிய சில்லுனு ஒரு காதல் படத்தில் முன்பே வா என்ற பாடல் சோகப் பாடல் மாதிரி இருந்தது. கிருஷ்ணா தான் பாட்டு நல்லா இருக்கும் என்றார்.

இருபது வருடங்கள் கடந்தும் இப்போதுவரை அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் எனக்கு பிடித்த பாடல் ட்ரைலரில் ஒரு பாட்டு வரும் அதான். சிம்பு ஊரில் இல்லாததால் அவர் பாடவில்லை. அக்கரையில பாட்டு சிம்பு பாட வேண்டியதுதான், அவர் இல்லாததால் நான் பாடினேன். டி.ராஜேந்தர் எனக்கு இன்ஸ்பையரானவர். அவரது வேலை செய்யும் விதம் பிடிக்கும்" என்று தெரிவித்தார். லைட் மேன் தொழிலாளர்களுக்கு நிதி திரட்ட ஏ.ஆர்.ரகுமான் தொடங்கியுள்ள இணையதளத்தை நடிகர் சிம்பு தொடங்கி வைத்தார்.

டி.ராஜேந்தர்‌ மேடை ஏறியவுடன் மைக்கில் தாளம் போட்டு மைக் டெஸ்ட் செய்தார். டி.ஆரின் இந்த செயலால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் பேசிய அவர், "இந்த மேடையில் அமர்ந்து உங்களை எல்லாம் சந்திப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பி வரவில்லை.

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பிறகு எந்த கூட்டமான பகுதிக்கும் செல்லவில்லை. நான் வர வேண்டும் என்று என் மகனுக்கு நாட்டம். வரவில்லை என்றால் அவருக்கு வாட்டம்" என அவரது வழக்கமான அடுக்குமொழியில் பேசினார்.

"என்‌ மனைவி என்னை நீங்கள் பேசாமல் தான் வரவேண்டும் என்றார். நான் இங்கு நிற்பதற்கு காரணம் என் மகன். எனது நண்பர் கார்த்தியின் மகன் கௌதம் கார்த்திக்கு வாழ்த்துகள். படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள். எனது மகன் படத்துக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து பாடல் தரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி" என்றார்.

இயக்குனர் கிருஷ்ணா, “பல்வேறு சூழ்நிலை காரணமாக படத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. கௌதம் கார்த்திக் சம்மந்தமான காட்சிகள் எடுத்துவிட்டோம். சிம்பு நடிக்க வேண்டிய காட்சிகள் எடுக்க ஒரு வாரம்தான் இருந்தது. சிம்பு அதற்கு தயாராகி வருகிறார். எனக்கு இரண்டு படங்கள் கிடைத்து கைவிட்டு போனது.

அதனை தொடர்ந்து ஞானவேல் ராஜாவின் பத்து நிமிடம் அமர்ந்து பேசினேன். இறைவன் அருளால் இந்த படம் இங்கு வந்து நின்றுள்ளது. இந்த ட்ரைலரை நேற்று இரவு ரகுமானிடம் கொண்டுபோய் கொடுத்தேன். எனக்கும் சிம்புவுக்கும் இருபது வருட பழக்கம். தம் படத்திற்கு பின் நான் தான் படம் பண்ண வேண்டியது. இப்படத்தில் புது கௌதம் கார்த்திக்கை பார்ப்பீர்கள்” என்றார்.

கௌதம் கார்த்திக், “பத்து தல எனது திரை வாழ்வில் மிகப் பெரிய படம். கிருஷ்ணா நிறைய கஷ்டங்களை கடந்து வந்துள்ளார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் கிருஷ்ணாவுக்கு நன்றி. இப்படத்திற்கு ஆக்சன் தான் பலம். சண்டை பயிற்சியாளர் சக்தி சரவணன் பயங்கரமாக உழைத்துள்ளார். சாயிஷா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். எனது கடல் படத்திற்கு ரகுமான் பாடல் போட்டுக்கொடுத்த போது கனவு நனவானது போல் இருந்தது. அதற்கு பிறகு இப்படத்தில் எனக்கு பாடல் கொடுத்துள்ளீர்கள்.

சிம்பு வேற லெவல் என்று சொல்லலாம். உங்கள் ஆன்மீக பயணம் பற்றி என்னிடம் சொன்னீர்கள் ஆனால் அது எனக்கு புரியவேயில்லை. சிம்புவின்‌ உடல் முழுவதும் நடிக்கும். அதனை‌ பார்த்து நான் மிரண்டு போனேன். இதுபோன்ற ஒரு நடிகரை நான் பார்த்ததேயில்லை. இதுபோன்று ஆக வேண்டும் என்றுதான் எனக்கும் ஆசை" என பேசினார்.

நடிகர் சிம்பு, "நான் இங்கு‌ நிற்க காரணமாக இருக்கும் எனது ரத்தங்களான ரசிகர்ளுக்கு வணக்கம். நான் இன்று அழக்கூடாது என்று தான் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்ததது. நான் மிகவும் எமோஷனலான ஆள். படத்தில் வந்தாலே அழுதுவிடுவேன். அழக்கூடாது என்று உங்களுக்காக நினைத்தேன். இனிமேல் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். சோக காட்சிகள் எல்லாம் முடிந்து விட்டது. இதே நேரு ஸ்டேடியத்தில் முதல்முறையாக எனக்காக கூடிய கூட்டத்தை பார்க்கிறேன். ரொம்ப நன்றி. எல்லா ஊரில் இருந்தும் நீங்கள் வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.

பத்து தல தொடங்கிய கதை ஒன்று உள்ளது. அப்போது நான் மிகவும் கஷ்டமான சூழலில் இருந்தேன். அந்த நேரத்தில் இறைவனை தேடி போகலாம் சினிமாவை விட்டு விட்டு சென்றுவிடலாம் என்று நினைத்தேன். ஞானவேல் ராஜா சொன்னார் சிம்பு வீட்டிலேயே இருக்கிறார் என்று‌. வீட்டிலேயே இருப்பது ஒரு குத்தமா. கன்னடத்தில் சிவராஜ் குமார் மிகப் பெரிய லெஜண்ட். அவரை போல் என்னால் ஒரு துளிகூட நடிக்க முடியாது. கௌதம் கார்த்திக்காக நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இங்கு தட்டிவிட நிறைய பேர் உள்ளனர். தட்டிக்கொடுக்க யாரும் இல்லை. எனக்கு தட்டிக்கொடுக்க என் ரசிகர்கள் மட்டும்தான் என்னுடன் இருக்கின்றனர். கௌதம் நடிகராக மட்டுமின்றி நல்ல பையன். அவருடைய குடும்பத்தில் நிறைய பிரச்சினைகளை பார்த்துவிட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளார். இப்படம் எனக்கு வெற்றிகிடைக்கிறதோ இல்லையோ கௌதமுக்கு மிகப் பெரிய வெற்றி பெறும். அப்போது குண்டாக இருந்தேன் அதனால் இந்த கதை சரியாக இருந்தது.

அதன்பிறகு மாநாடு என்று வேறு பாதையில் போய்ட்டு இருந்தேன். ஞானவேல்ராஜாவை கேட்டேன் சம்பளத்தை திருப்பி தருகிறேன் என்று. கிருஷ்ணா மீண்டும் வந்து நீங்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றார். நமக்கு பிரச்சினை பண்ண நிறைய பேர் இருக்கிறார்களே. இனி என்னால் வெயிட் போட முடியாது என்றேன். 108 கிலோ இருந்து குறைந்த என்னால் மீண்டும் உடல் எடையை கூட்டி குறைக்க முடியாதா என்று இப்படத்திற்கு ஓகே சொன்னேன்.

என்னால் என்ன பண்ண முடியுமோ அதனை இப்படத்தில் செய்துள்ளேன் நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள். ஞானவேல்ராஜா சூர்யா படம், தங்கலான் என அடுத்தடுத்து படம் எடுத்து வருகிறார். வாழ்த்துகள் ப்ரோ. எனது ரசிகர்களை பார்க்க இந்த விழாவை ஏற்பாடு செய்த ஞானவேலுக்கு நன்றி. இந்த படத்தில் எனக்கு துணை கிடையாது. எனக்கு படத்திலும் துணை இல்லை வாழ்க்கையிலும் துணை இல்லை. அது பரவாயில்லை.

கிருஷ்ணாவுடன் ஏற்கனவே படம் நடிக்க வேண்டியது அப்போது பண்ணியிருந்தால் ஒத்த தலைதான் கிடைத்திருக்கும் இப்போது பத்து தல கிடைத்துள்ளது. எனது காட்பாதர் ரகுமான். என்னைக்குமே அவரது பெயரை கெடுத்துவிட மாட்டேன் என்று நம்புகிறேன். ஒரு ஆன்மீக குருவாகவும் அவர் எனக்கு உள்ளார்.

கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை 10 நாட்கள் எடுத்தோம். நீங்கள் அந்த சண்டையை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். எனது அப்பா அம்மா இங்கு வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. முதல் முறையாக இருவரும் வந்துள்ளனர். ரசிகர்களை பார்க்கவே இருவரும் இங்கு வந்துள்ளனர். (சிம்பு பேசும்போது ரசிகர்கள் கூல் சுரேஷ்...கூல் சுரேஷ்...என்று கத்திக்கொண்டே இருந்தனர்).

நீங்கள் ஏன்‌ இப்போது அமைதியாக பேசுகிறீர்கள் முன்மாதிரி சத்தமாக பேசுவதில்லையே என்பதற்காக காரணம் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது கஷ்டத்தில் இருந்தேன். தட்டிக்கொடுக்க யாரும் இல்லை. இனி சிம்பு அவ்வளவு தான் என்று சிலர் பேசினார்கள். அந்த கஷ்டத்தை நான் வெளியில் காட்டவில்லை. எனக்கு நான் தான் துணை இருக்க முடியும். அப்போது என் ரசிகர்களை விட்டால் யாரும் துணை இல்லை. 39 கிலோ உடல் எடை குறைத்ததற்கு இதுதான்‌ காரணம்.

மாநாடு படத்தை மிகப் பெரிய வெற்றி பெற வைத்துள்ளீர்கள். எப்படி என்னால் கத்தி பேச முடியும் பணிந்துதான்‌ பேசுவேன். இனி பேச ஒன்றும் இல்லை செயல் மட்டும்தான். ஒவ்வொரு நாளும் நாம் நம்மை மாற்றித் தான் ஆக வேண்டும். இனிமே நீங்கள் சந்தோஷமாக இருங்கள் மற்றதை நான்‌ பார்த்துக்கிறேன்.

சமூக வலைத்தளங்களில் எதுவும் செய்ய வேண்டாம். இனி நான்‌என்ன செய்கிறேன் என்று மட்டும் பார். ஜாலியா கூலா சந்தோஷமா பார். உங்களை இனி தலைகுணிய விட மாட்டேன். தமிழ் சினிமா பெருமைப்படுவது போல் நான் கண்டிப்பா படம் எடுப்பேன். ரசிகர்கள் உங்களின் தனித்தன்மையை யாருக்கும் விட்டுக்கொடுத்துவிடாதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’பத்து தல’ இசை வெளியீட்டு விழாவின் மிரட்டலான கிளிக்ஸ்..!

Last Updated : Mar 19, 2023, 10:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details