தமிழ்நாடு

tamil nadu

Maamannan: ரசிகர்களை மிரள வைத்த 'மாமன்னன்' போஸ்டர்!

By

Published : May 2, 2023, 12:15 PM IST

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘மாமன்னன்’ லுக்ஸ்
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘மாமன்னன்’ லுக்ஸ்

சென்னை:தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோரின் வரிசையில் மிகவும் கவனிக்கத்தக்க இயக்குநராக வலம் வருபவர், இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய இரு திரைப்படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

அதிலும், கமர்ஷியல் ஹீரோவான தனுஷை வைத்து கருத்தியல் சார்ந்த திரைப்படத்தை எடுத்து, அதனை ரசிகர்கள் கொண்டாடிய வெற்றிப் படமாகவும் மாற்றியதில் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் கவனிக்கப் பெற்றார். இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள புதிய திரைப்படம், ‘மாமன்னன்’.

அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கியமான முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். படம் தொடங்கும் போதே, உதயநிதி ஸ்டாலின் - பகத் பாசில் - வடிவேலு கூட்டணி புதிதாகவும், ஒரு எதிர்பார்ப்பையும் உண்டாக்கியது.

இந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த ஏப்ரல் 30 அன்று படத்தின் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் அருகருகே பீடத்தின் மேல் உள்ள இருக்கையில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருக்கின்றனர்.

இதில், வேஷ்டி - சட்டை உடன் அமர்ந்திருக்கும் வடிவேலுவின் கையில் துப்பாக்கியும், பேண்ட் - சட்டை உடன் அமர்ந்திருக்கும் உதயநிதி ஸ்டாலினின் கையில் வாளும் வைத்துள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதேநேரம், மே தினமான நேற்று (மே 1) வெளியான போஸ்டரில் வடிவேலு மற்றும் பகத் பாசில் கீழே குனிந்த நிலையிலும், உதயநிதி ஸ்டாலின் நேராக பார்த்துக் கொண்டிருப்பது போல் உள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து அமைதியாக வெளியான போஸ்டர், ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும், இவ்வாறு வெளியான போஸ்டர்களில் ஜூன் மாத வெளியீடு என குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, மே 1 அன்றே போஸ்டரை வெளியிட அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் போஸ்டர் கசிந்ததால், முன் கூட்டியே போஸ்டரை வெளியிட்டது படக்குழு. அதேநேரம், இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்ததாக தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்.

இதில் கர்ணனுக்கு பிறகு மீண்டும் மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி இணைய உள்ளது. அதேபோல், உதயநிதி ஸ்டாலின் இதற்கு மேல் நடிக்கவில்லை என சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாரதிராஜா படத்தின் தழுவலா ஜவான்.? சுவாரஸ்யமான அப்டேட்

ABOUT THE AUTHOR

...view details