தமிழ்நாடு

tamil nadu

"ஐ லவ் யூ சோ மச் சார்" - ரஜினிகாந்த் குறித்து எக்ஸ் பக்கத்தில் 'பேட்ட' நினைவுகளைப் பகிர்ந்த மாளவிகா!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 1:32 PM IST

Malavika Mohanan about Rajinikanth: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உடனான நினைவுகளை மாளவிகா மோகனன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

Malavika Mohanan about Rajinikanth
ரஜினிகாந்த்

மும்பை: தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படம் வெளியாகி இன்றுடன் 5 வருடங்கள் நிறைடைந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தில், நடிகர் ரஜினிகாந்த் உடன் பணியாற்றிய நினைவுகள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “பேட்ட படம் தான் என்னுடைய முதல் தமிழ் படம். இந்த படம் நான் நடித்தற்கான முதல் காரணம் ரஜினிகாந்த் சார் தான். புதிய திரை உலகம், புதிய நட்சத்திரங்கள் என எனக்குக் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. என்னுடைய முதல்நாள் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் சார் ஷேட் உள்ளே வந்ததும் எல்லாரும் அமைதியாகி விட்டனர்.

என்னை ரஜினிகாந்த் சாரிடம் இணை இயக்குநர் அறிமுகப்படுத்தினார். அப்போது ரஜினிகாந்த் சார் என்னிடம் அருமையாகவும், கண்ணியமாகப் பேசினார். அப்போது கார்த்திக் சுப்புராஜ் சார் ஷாட் ரெடி என்று கூறினார். அப்போது நான் ரஜினிகாந்த் சார் கூட சிறிய பேச்சு முடிந்துவிட்டது என்று நினைத்தேன். மேலும், என்னைப் போன்ற புதியவர்களிடம் பேச இன்னும் என்ன இருக்கப்போகிறது என நினைத்தேன்.

ஆனால், ஒவ்வொரு ஷாட் முடித்தபின்னும், ரஜினிகாந்த் சார் என்னைப் பற்றியும், என்னுடைய குடும்பம் பற்றியும், என்னுடைய படிப்பு பற்றி என அனைத்தையும் கேட்டு எனது பதட்டத்தைக் குறைத்தார். மேலும், நான் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் சாருக்கு ஜோடியும் இல்லை. அவர் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அன்று மட்டும் இல்லை, அவருடன் நடித்து முடிக்கும் நாள் வரை அவர் என்னிடம் காட்டிய எளிமையை என்னால் என்றும் மறக்க முடியாது.

குறிப்பாக, இந்த படத்தில் என்னுடைய தந்தை இறந்து போன காட்சிக்கு நான் நடித்ததைக் கண்டு எனக்கு முதன்முதலில் கை தட்டல் கிடைத்தது ரஜினிகாந்த் சாரிடம் இருந்து தான். அதேபோல் இந்த படம் வெளியானதும், நீ மிகப்பெரிய முன்னணி நடிகையாக மாறுவாய் என்று முதன்முதலாகக் கூறியதும் ரஜினிகாந்த் சார் தான்.

திரைத்துறையில் புதிய பயணத்தைத் தொடங்கும் பெண்ணுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் வார்த்தைகளைக் கூறியது ரஜினிகாந்த் சார் மட்டும் தான். உண்மையில் நீங்கள் மேன்மையானவர். ஐ லவ் யூ சோ மச் சார். பேட்ட படம் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்” என்று மாளவிகா மோகனன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் பேட்ட படம் தவிர்த்து விஜய் நடிப்பில் மாஸ்டர், தனுஷ் உடன் மாறன், தற்போது விக்ரம் உடன் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இதுவரை இல்லாத ஆக்‌ஷனை செய்துள்ளேன் - மிஷன் குறித்து நடிகர் அருண் விஜய் பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details