தமிழ்நாடு

tamil nadu

எனக்கு மிரட்டல் வந்தாலும் பரவாயில்லை; அரசியல் என்றால் என்ன என்பதைக் காட்டியுள்ளோம் - இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன்

By

Published : Mar 23, 2023, 9:58 PM IST

எனக்கு மிரட்டல் வந்தாலும் பரவாயில்லை; அரசியல் என்றால் என்ன என்பதை இந்த தொடரில் உண்மையாக காட்டியுள்ளோம் என இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் கூறினார்.

Etv Bharat
Etv Bharat

எனக்கு மிரட்டல் வந்தாலும் பரவாயில்லை; அரசியல் என்றால் என்ன என்பதைக் காட்டியுள்ளோம் - இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன்

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானவர். அதனைத்தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், சத்ரியன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது முதல் முறையாக செங்களம் என்ற இணையத் தொடரை இயக்கியுள்ளார். இதில் கலையரசன், விஜி சந்திரசேகர், டேனியல், பிரேம், வாணி போஜன், ஷாலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தரண் குமார் இசை அமைத்துள்ளார்.

ஜீ 5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ள இந்த செங்களம் இணைய தொடர் இன்று செய்தியாளர்களுக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜி சந்திரசேகர், பிரேம், டேனியல், ஷாலி , வாணி போஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது, 'எனக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை. எனது குடும்பம் போல தான் உங்களைப் பார்க்கிறேன். என்னை எப்படி இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தீர்கள் என்று தெரியவில்லை. படத்திற்கு இசை மிகப்பெரிய பலம். அயலியை எப்படி நீங்கள் தூக்கி சென்றீர்கள். அது போல இந்த தொடரையும் வெற்றி பெறச்செய்ய வேண்டும்' என்றார்‌.

இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் பேசுகையில், 'எனக்கு மிரட்டல் வந்தாலும் பரவாயில்லை. அரசியல் என்றால் என்ன என்பதை இந்த தொடரில் உண்மையாக காட்டியுள்ளோம். இது என்னுடைய 5-வது படைப்பு. சுந்தர பாண்டியன் படம் வரும்போது இருந்த பதற்றம் தற்போது உள்ளது. இதை நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும்.

இந்த செங்களம் சுடச்சுட ஒரு அரசியல் களம். இதைப் பார்க்கும்போது உங்களுக்கு எந்த அரசியல் தலைவர் தோன்றுகிறாரோ அதை அப்படியே மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மிரட்டல் வந்தால் பார்த்து கொள்ளலாம்.

மாநில அரசியலை முழுமையாக சொல்ல முடியாது. அதனால் மாவட்ட அரசியலைச் சொல்லி உள்ளேன். நான்‌ பார்த்த அரசியலை இக்கதையில் சொல்லியுள்ளேன். நமக்கு தெரிந்தது சசிகலா, ஜெயலலிதா என்பதால், இதை பார்க்கும் போது அப்படி தெரியலாம். நிறைய அரசியல்வாதிகள் குறித்து இதில் உள்ளது.

வயதான தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆளும் கட்சியைச் சார்ந்தவர் என்று சொல்லவில்லை. ராமதாஸ் கூட சில நேரங்களில் நாற்காலியில் இருப்பார். வயதானவர் என்று காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் அப்படி வைத்தேன்' என்றார்.

இந்த படத்தில் சக்கர‌ நாற்காலியில் வருவது போன்று காட்டப்பட்டுள்ளது. இதை பார்த்த செய்தியாளர்கள் படத்தில் கருணாநிதி குறித்து தவறாக காட்டியுள்ளதாக கேள்வி எழுப்பினர். மேலும் ஜெயலலிதா, சசிகலா கதாபாத்திரத்தை போன்று இதில் கதாபாத்திரங்கள் வருகின்றன. இதுகுறித்தும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த இயக்குநர் ''நான் பார்த்த அரசியல் நிகழ்வுகள் குறித்து மட்டுமே இதில் சொல்லியுள்ளேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் முதல்முறையாக 'Music entrepreneurship' துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன் - ஹிப்ஹாப் ஆதி

ABOUT THE AUTHOR

...view details