தமிழ்நாடு

tamil nadu

பழனி முருகன் கோயிலுக்கு படையெடுக்கும் திரைப் பிரபலங்கள் - காரணம் என்ன?

By

Published : Feb 23, 2023, 9:26 PM IST

பழனி முருகன் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் அதிகமான சினிமா பிரபலங்கள் பழனிக்கு சென்று முருகனை தரிசித்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

பழனி முருகன் கோயிலுக்கு படையெடுக்கும் திரைப் பிரபலங்கள் - காரணம் என்ன?

சென்னை: மிகவும் பிரசித்திபெற்ற முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி கோயிலில் கடந்த 2006ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 2019இல் பாலாலய பூஜையுடன் கோயிலுக்கான கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கின. இந்த நிலையில் கடந்த ஜனவரி 27ஆம் தேதி பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 16 வருடத்திற்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றதால் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசித்துச் சென்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பழனி கோயிலுக்குச் செல்லும் சினிமா பிரபலங்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. முன்னதாக நடிகை சமந்தா பழனி கோயிலுக்குச் சென்று படிக்கட்டுகளில் விளக்குகளை ஏற்றி நெஞ்சுருக வேண்டினார். அதனைத்தொடர்ந்து நடிகை அமலா பால் பழனிக்குச் சென்று முருகனை தரிசனம் செய்தார்.

மேலும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட கெளதம் கார்த்திக் - மஞ்சிமா ஜோடி பழனிக்குச் சென்று முருகனை வழிபட்டனர். நேற்று சந்தானம், கூல் சுரேஷ் ஆகியோர் பழனி முருகனை வழிபட்டுள்ளனர். நடிகர் சந்தானம் நடிக்கும் ’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வருகிறது. இதனால் சந்தானம் பழனி கோயிலுக்குச் சென்று வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. நடிகர் சிலம்பரசன் ரசிகரான கூல் சுரேஷ் சிலம்பரசன் நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘பத்து தல’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என பழனியில் வேண்டினார்.

இந்நிலையில் பழனிகோயிலுக்கு கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பொதுவாக தினமும் கோயிலுக்குச் செல்வது பலனளிக்கும் என்றாலும், கும்பாபிஷேகத்திற்கு கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வது சென்றவருக்கும் சென்றவரின் குடும்பத்திற்கும் அதிகப் பலன்களை தரும் என்று நம்பப்படுகிறது.

ஒருவேளை அந்த கும்பாபிஷேக தினத்தன்று கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்குள் அந்த கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தால், கும்பாபிஷேகத் தினத்தன்று சாமி தரிசனம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் கிடைக்கும் என்கின்றனர், வேதவிற்பன்னர்கள். இதனால்தான் பழனி முருகனை பார்க்க பிரபலங்கள் தொடர்ந்து படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தயவுசெய்து சிம்பு பெயரை களங்கப்படுத்தாதீர்கள் - "பத்து தல" இயக்குநர் கிருஷ்ணா கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details