தமிழ்நாடு

tamil nadu

செருப்படியிலிருந்து இளைஞர்கள் தப்பித்துக் கொள்ள இமெயில் உதவுகிறது - இயக்குநர் பாக்யராஜ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 2:06 PM IST

Email tamil movie: ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல லவ் லெட்டர் கொடுத்தால் அந்தப் பெண் உடனே கோபமாகி செருப்பை கழட்டுவார், இந்த இமெயில் வந்தவுடன் அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது என இயக்குநர் பாக்யராஜ் கூறியுள்ளார்.

பெண்கள் செருப்படியிலிருந்து இளைஞர்கள் தப்பித்து கொள்ள இமெயில் உதவுகிறது
பெண்கள் செருப்படியிலிருந்து இளைஞர்கள் தப்பித்து கொள்ள இமெயில் உதவுகிறது

சென்னை: SR பிலிம் பேக்டரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ திரைப்பட நடிகர் அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.

இப்படத்தின் விளம்பர நிகழ்வில் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கதாநாயகன் அசோக் குமார் பேசும்போது, “இந்த படத்தின் முதுகெலும்பு என்றால் அது இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன் ஒருவர்தான்.

இமெயில் என்றால் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் இவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை மையப்படுத்தி ஒரு அழகான திரைக்கதையை நிறைய திருப்பங்களுடன் அவர் அமைத்துள்ளார். சண்டை காட்சியின்போது எனது காது கிழிந்து விட்டது. மக்களிடம் இந்த படம் போய் சேரும்போது, அந்த வலியெல்லாம் பெரிதாக தெரியாது. இயக்குநர் ராஜனின் இந்த துணிச்சலுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது, “இந்த தலைப்பிற்கு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. இமெயில் என்றாலே, இன்று எல்லோருக்கும் தெரியும். இந்தப் படம் ஒரு கேமை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது என்பது தெரிகிறது. கேம் என்றாலே பிரச்னைதான். அது பிக்பாஸ் கேமாக இருந்தாலும் சரி, போனில் இருக்கும் கேமாக இருந்தாலும் சரி. நாம் என்ன தான் விளையாட்டிற்குள் சென்றாலும் கூட, நமது மனதை பாதுகாப்பாக தற்காத்து வைக்க வேண்டும். ஆனால், அது இந்தக் கால தலைமுறையினரிடம் மிகவும் குறைவாக இருக்கிறது.

பிறந்த குழந்தையின் கையில் செல்போனை கொடுத்து விடுகிறார்கள். அவர்களுக்கு நம்மை விட எல்லாமே அதிகமாக தெரிகிறது. எனது மூன்று வயது மகள்கூட மொபைல் மூலமாக ஆன்லைனில் பணம் கட்டும் அளவிற்கு வளர்ந்து விட்டாள். அதேநேரம் குழந்தைகளுக்கு எதை எவ்வளவு சொல்லிக் கொடுக்க வேண்டும், எதில் அவர்கள் கவனத்தை திருப்ப வேண்டும் என்பதை பெரியவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த படத்தில் அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்” என்று கூறினார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, “சிறு பட தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை தயாரிப்பாளர் ராஜன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நானும்கூட அவ்வப்போது இது பற்றி கூறி வருகிறேன். ஒரு வளாகத்தில் நான்கு திரையரங்குகள் இருந்தால், அதில் ஒன்றை கட்டாயம் சிறுபட வெளியீட்டுக்காக கொடுக்க வேண்டும் என ஒரு சட்டமே கொண்டு வர வேண்டும்.

நிறைய திரையரங்குகள் கொடுத்தால்தானே மக்கள் வந்து படத்தை பார்த்து பாராட்டுவார்கள். இந்த படத்தின் நாயகன் அசோக் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. ரொம்பவே கொடுத்து வைத்தவர். படத்தில் அவரது காட்சிகளை பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக தெரிந்தது. அதுமட்டுமல்ல, இந்த படத்தில் சண்டை காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்.

இமெயில் வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் பேப்பரில்தான் எழுதி அனுப்பி கொண்டிருந்தோம். இமெயில் வந்த பிறகு, பேப்பரின் தேவை குறைந்து விட்டது. அதனால் மரங்களை வெட்டுவதும் குறைந்து, இயற்கையும் பாதுகாக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, நிறைய இளைஞர்கள் செருப்படியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ஏனென்றால், முன்பெல்லாம் ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல லவ் லெட்டர் கொடுத்து, அந்தப் பெண் உடனே கோபமாகி செருப்பை கழட்டுவார். இந்த இமெயில் வந்தவுடன், அந்த அவசியம் இல்லாமல் போய்விட்டது. இதற்கு மட்டுமல்லாது, சில பெரிய மனிதர்களிடம் கூட தடுமாற்றம், பயம் காரணமாக நாம் சொல்ல முடியாத விஷயங்களை சொல்வதற்கு இந்த இமெயில் உதவுகிறது.

ஆன்லைனில்தான் மோசடி நடக்கிறது என்றில்லை. ராஜன் சொன்னது போல படப்பிடிப்பு நடித்த அனுமதி வாங்கிச் சென்றாலும், அந்த இடத்தில் இருப்பவர்கள் லஞ்சம் கேட்பார்கள். அங்கே ஒரு தனி யூனியன் வைத்திருப்பார்கள். அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுப்பார்கள்” என்று கூறினார். இமெயில் படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க, திரவுபதி திரைப்பட இசையமைப்பாளர் ஜுபின் பின்னணி இசை பணிகளை மேற்கொண்டு வருகிறார். செல்வம் முத்தப்பன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இமெயில் திரைப்படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் தயாராகி உள்ளது.

இதையும் படிங்க:"வாழ்ந்தால் கேப்டன் போல வாழ வேண்டும்" - நடிகர் சூரி உருக்கம்..!

ABOUT THE AUTHOR

...view details