தமிழ்நாடு

tamil nadu

20ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.15இல் தொடக்கம்!

By

Published : Dec 8, 2022, 3:42 PM IST

டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கும் சென்னை திரைப்பட விழாவை நடத்துவதற்காக ஒரு கோடி ரூபாய் தமிழ்நாடு அரசிடம் நிதி கேட்டுள்ளதாக சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தலைவர் தங்கராஜ் தெரிவித்தார்.

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.15இல் தொடக்கம்
20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.15இல் தொடக்கம்

சென்னை: 20ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்ப் பிரிவில் 12 திரைப்படங்களும், இந்தியன் பனோரமா பிரிவில் 3 தமிழ்ப் படங்கள் என மொத்தம் 15 தமிழ்ப் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திரைப்பட விழாவை நடத்துவதற்காக ஒரு கோடி ரூபாய் தமிழ்நாடு அரசிடம் நிதி கேட்டுள்ளதாக சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தலைவர் தங்கராஜ் தெரிவித்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தயாரிப்பாளர் கட்டடத்தில் "20ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா" தொடர்பாக அதன் தலைவர் தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், '20ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகத்தரம் வாய்ந்த படங்களை தேர்வு செய்துள்ளோம்.

20ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 75 உலக சினிமாக்கள் திரையிடப்பட உள்ளன. இதில் குறிப்பாக 12 தமிழ்ப் படங்களும், இந்தியன் பனோரமா பிரிவில் 15 இந்தியப் படங்கள் திரையிடப்பட உள்ள நிலையில் அதில் 3 தமிழ்ப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

சென்னை எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி படைப்பாக 9 குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஜெர்மன் திரைப்படம் ஒன்றை திரையிட உள்ளோம். இதே படத்தை பெண்களுக்கான சிறப்பு காட்சியாகவும் திரையிட உள்ளோம். இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்ப் படத்திற்கு 9 விருதுகள் வழங்கப்பட உள்ளது. சிறந்த தமிழ்ப் படம் (தயாரிப்பாளர், இயக்குநருக்கு வழங்கப்படுகிறது). அதே போல ஸ்பெஷல் ஜூரி விருது, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பட தொகுப்பாளர், சிறந்த ஒலி வடிவமைப்பாளர், யூத் ஐகான் விருது ஆகிய பிரிவில் வழங்கப்படுகின்றன.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஒரு கோடிக்கு மேல் செலவாகும் நிலையில் தமிழ்நாடு அரசிடம் ஒரு கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளோம்’ என சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தலைவர் தங்கராஜ் தெரிவித்தார்.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட 30 படங்கள் போட்டியிட்டன. அதில் 12 தமிழ்ப் படங்கள் தேர்வாகின. படங்களின் விவரம்: ஆதார், பிகினிங், பபூன், கார்கி, கோட், இறுதி பக்கம், இரவின் நிழல், கசடதபற, மாமனிதன், நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, யுத்த காண்டம்.

அதேபோல இந்தியாவிலுள்ள சிறந்த படங்களுக்கான இந்தியன் பனோரமா பிரிவில் மொத்தம் 15 படங்கள் திரையிடப்பட உள்ளது. அதில் மூன்று தமிழ்ப்படங்கள் தேர்வாகியுள்ளன. அதன் விவரம் கடைசி விவசாயி, மாலை நேர மல்லிபூ, போத்தனூர் தபால் நிலையம் என்பனவாகும்.

இதையும் படிங்க: பா.ரஞ்சித் - கலையுலகில் ஒரு கலகக்குரல்!

ABOUT THE AUTHOR

...view details