தமிழ்நாடு

tamil nadu

கலெக்‌ஷன் பணம் சுமார் ரூ.12 லட்சம் திருட்டு - சிக்கிய ஊழியர்கள்!

By

Published : Jul 30, 2021, 6:12 AM IST

எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணிக் கடை கண்காணிப்பாளரைத் தாக்கி 11 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற கொள்ளையர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி
எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி

சென்னை: மண்ணடியைத் தலைமையிடமாகக் கொண்டு சென்னை மாநகரில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது.

இந்தக் கடைகளில் வசூலாகும் பணத்தை, நிறுவனம் நியமித்திருக்கும் கண்காணிப்பாளர் சுரேந்தர் வசூல் செய்து, மண்ணடி தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு செல்வது வழக்கம். இவர் கடந்த 12 வருடங்களாக இந்தப் பிரியாணி கடையின் தலைமையின் கீழ் வேலை செய்து வருகிறார்.

பணம் திருட்டு

எப்போதும் போல நேற்று முன்தினம் (ஜூலை 28) பெரம்பூர் பகுதியிலுள்ள பிரியாணி கடையில் பணத்தை வாங்கிக்கொண்டு வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலை வழியாக சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர், சுரேந்திரனைத் தாக்கி ரூ.11 லட்சத்து 88 ஆயிரம் பணத்தைப் பறித்துச் சென்றனர்.

இது குறித்து, சுரேந்திரன் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எம்கேபி நகர் உதவி ஆணையர் தமிழ்வாணன் மற்றும் வியாசர்பாடி காவல் துறையினர், அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகளை ஆய்வுசெய்து குற்றவாளிகளைத் தேடினர்.

தீவிர விசாரணை

இந்நிலையில் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், பிரியாணிக் கடையில் வேலை செய்யும் ஊழியர்களை அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில் பிரியாணி கடையில் வேலை செய்யும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(26) என்ற நபர் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மேற்படி பணம் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

பவர் பேங்க் செயலி மோசடி - தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் கைது

அதனடிப்படையில் காவல் துறையினர் பத்திற்கும் மேற்பட்ட நபர்களைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விசாரணையில் திடுக் தகவல்கள்

பிரியாணி கடையில் கண்காணிப்பாளராக பணிபுரியும் சுரேந்தர், அவரது நண்பர் பிரகாஷுடன் சேர்ந்து வசூல் பணத்தைத் திருட திட்டமிட்டு, இதற்கு பிரகாஷின் நண்பர்கள் உறுதுணையாக சேர்த்துக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து காவல் துறையினர் பிரகாஷின் நண்பர்களான பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம்(26), ஆவடி பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிரகாஷ் (26), கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற சாமுவேல்(27), ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார்(30) உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து திருடுபோன ரூ.11 லட்சத்து 88 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சுரேந்தர் அவரின் நண்பர் பிரகாஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையிலடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details