தமிழ்நாடு

tamil nadu

குதிரை பந்தயத்தில் ஈடுபட முயன்ற 14 பேர் கைது; 11 குதிரைகள் பறிமுதல்!

By

Published : Sep 5, 2021, 10:55 PM IST

ஆவடி வீராபுரம் அருகே ரேக்ளா ரேஸ் நடத்த முயன்ற 40 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், 11 குதிரைகள், அவற்றை ஏற்றி வந்த 7 லோடு வேன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

avadi horse race
avadi horse race

சென்னை: ஆவடி அருகே ரேக்ளா ரேஸில் ஈடுபட முயன்ற 40 பேரை காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்ததுடன், இது தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 11 குதிரைகளையும், 10 சிறிய ரக சுமையேற்றும் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

சென்னை ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளனூர் பகுதியில் அனுமதியின்றி குதிரை வண்டியை வைத்து ரேக்ளா பந்தயம் நடக்க இருப்பதாக ஆவடி காவல் உதவி ஆணையாளர் சத்தியமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரேக்ளா ரேஸ்

இதுமட்டுமின்றி இந்த போட்டிக்காக திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் சென்னைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்களில் பந்தைய குதிரைகள் கொண்டுவரப்படுவதாகவும் தகவல் வந்தது.

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, போட்டி நடைபெறாமல் தடுக்கவும், போட்டிகளில் பங்கேற்க வருபவர்களை ஆவடி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலேயே மடக்கிபிடிக்கவும் ஆவடி உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

சுற்றிவளைத்த காவல் துறை

இந்த உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் ஜெகநாதன், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், ஆவடி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்தினார்கள்.

அப்போது சென்னைக்குட்பட்ட மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேக்ளா பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக வந்து கொண்டிருந்தவர்களை காவல் துறையினர் எல்லைகளிலேயே மடக்கி பிடித்தனர்.

இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக கொண்டு வரப்பட்ட 11 குதிரைகளையும், குதிரைகளை ஏற்றி வந்த 10 டாடா ஏசி வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பந்தய குதிரை உரிமையாளர்கள் உள்பட 40 பேரை பிடித்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குதிரை பந்தயத்தில் ஈடுபட முயன்ற 14 பேர் கைது; 11 குதிரைகள் பறிமுதல்

குதிரை போட்டிக்கு அனுமதி வேண்டும்

குதிரை போட்டியால் தங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்றும், குதிரைகளில் நலனுக்காகவே இம்மாதிரயான போட்டிகளில் கலந்து கொள்வதற்காக குதிரைகளை மிகவும் சிரமப்பட்டு அழைத்து வருவதாகவும் பந்தய குதிரை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் நாட்டு குதிரைகளை வளர்ப்பதற்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும், போட்டிகளில் பங்கேற்பதற்காக உரிமம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details