தமிழ்நாடு

tamil nadu

ரயில்வே பாலம் சேதம்: பல ரயில்கள் ரத்து

By

Published : Dec 25, 2021, 6:41 AM IST

பொன்னை ரயில்வே பாலம் பழுதானதையடுத்து, அதனைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதன் காரணமாகப் பல ரயில்கள் ரத்துசெய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் திருப்பியும் விடப்பட்டுள்ளன.

ரயில்வே பாலம் சேதம்: பல்வேறு ரயில்கள் ரத்து
ரயில்வே பாலம் சேதம்: பல்வேறு ரயில்கள் ரத்து

வேலூர்: காட்பாடி அடுத்துள்ள திருவலம் வழியே செல்லும் பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள பழைய ரயில்வே பாலம் கடந்த மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது.

இதனை ரோந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் பாலத்தின் 38, 39 ஆகிய கண்ணுகளுக்கு அடியில் சேதம் அடைந்ததைக் கண்டறிந்தனர்.

பழுதைச் சரிசெய்யும் பணி

இதனையடுத்து பழுது கண்டறியப்பட்ட இடத்தில் 100-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எக்ஸ்கவேட்டர் இயந்திரம் மூலம் தற்போதைக்கு வரும் குறைந்த அளவு நீர் ஓட்டத்தை நிறுத்தி கட்டுமான பணியின் மூலமாகப் பாலத்தை பலப்படுத்தும் பணியைத் தொடங்கவுள்ளனர்.

பழைய பாலத்துக்கு அருகிலுள்ள சென்னை மார்க்கமான புதிய பாலத்தை, ஒரு வழிப் பாதையாகப் பயன்படுத்தி ரயில்கள் இயக்கப்படுவதால் இருமார்க்கமாகச் செல்லும் ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டுவருகின்றன. இதனால் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

ரயில்கள் முழுமையாக ரத்து

பாலத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை-ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை-சென்னை, அரக்கோணம்-ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை-அரக்கோணம், வேலூர்-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை- வேலூர்,

சென்னை சென்ட்ரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரூ, கே.எஸ்.ஆர். பெங்களூரூ-சென்னை சென்ட்ரல், ரேணிகுண்டா-மைசூரு, மைசூரு-ரேணிகுண்டா, சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர், கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல்-மங்களூரு, சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் உள்ளிட்ட ரயில்கள் டிசம்பர் 24ஆம் தேதியும்,

மங்களூரு-சென்னை சென்ட்ரல், ஆலப்புழா-சென்னை சென்ட்ரல், ரேணிகுண்டா-மைசூரு, மங்களூரு-சென்னை வெஸ்ட் கோஸ்ட் அதிவிரைவு ரயில், திருவனந்தபுரம்-சென்னை அதிவிரைவு ரயில், சென்னை-சாய் பி நிலையம், சாய் பி நிலையம்-சென்னை, சென்னை-கோயம்புத்தூர் அதிவிரைவு ரயில், எஸ்வந்த்பூர்-சென்னை, சென்னை-எஸ்வந்த்பூர் ஆகிய ரயில்கள் டிசம்பர் 25ஆம் தேதியும் முழுமையாக ரத்துசெய்யப்படுகின்றன.

மாற்றுப் பாதையில் செல்லும் ரயில்கள்

மேலும், சில்சார்-கோயம்புத்தூர், டாட்டா நகர்-எர்ணாகுளம், சென்னை-மதுரை அதிவிரைவு ரயில்கள் டிசம்பர் 25ஆம் தேதி மாற்றுப்பாதையில் செல்கின்றன.

மைசூருவிலிருந்து சென்னை வரும் மைசூரு விரைவு ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும் எனவும், சென்னை சென்ட்ரலிலிருந்து கே.எஸ்.ஆர். செல்லும் ரயில் சென்னைக்குப் பதிலாக காட்பாடியிலிருந்து புறப்படும் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:School accident: அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - மனித உரிமை ஆணைய நீதிபதி அதிரடி

ABOUT THE AUTHOR

...view details