தமிழ்நாடு

tamil nadu

கரிகிரி மாயக்குவளை! பழங்கலையின் நிகழ் மிச்சம்!

By

Published : Nov 21, 2020, 9:03 AM IST

Updated : Nov 21, 2020, 2:31 PM IST

வேலூர்: மன்னர்களின் பாதுகாப்புக்காக மாயாஜால நுணுக்கங்களுடன் தயாரிக்கப்பட்டதுதான் கரிகிரி மாயக்குவளை. அதன் நுட்பம் தற்போது யாருக்கும் அறியாமல் ஒருசில மாயக்குவளைகளே மிஞ்சியிருக்கின்றன. நூறாண்டு பழமையான கரிகிரி மாயக்குவளை பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.

kuvalai
kuvalai

மினுமினுக்கும் தங்க விளக்கை கையால் தடவினால் உள்ளிருந்து புன்சிறிப்புடன் வெளி வரும் மாய பூதம். அத்தகைய அலாவுதீனின் அற்புத விளக்கை ஒத்த வடிவிலான ஒரு நீர் குவளையை, காட்பாடியை அடுத்த கரிகிரி கிராமத்தைச் சேர்ந்த குயவர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்பாக உண்மையான மாயாஜாலத்துடன் செய்துள்ளனர்.

அப்படி என்ன மாயாஜாலம் அது? 1,700களின் காலகட்டம், ஆற்காடு நவாபுகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொதுவாகவே மன்னர் என்றால் அவருக்கான பாதுகாப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கும். மெய் காப்பாளர்கள், கோட்டையை சுற்றி அகழி, சுரங்கப்பாதை என பல பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டிருக்கும். அது போன்ற பாதுகாப்பை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டது தான் ’கரிகிரி மாயக்குவளை’.

வரலாற்று குறிப்பற்ற இந்த குவளை காட்பாடியை அடுத்த கரிகிரி கிராமத்தில் வாழ்ந்த, குறிப்பிட்ட சில குடும்பத்தினரால் மட்டுமே செய்யப்பட்டது என்கிறார், வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன். இந்தக் குவளையில் உள்ள தண்ணீரில் யாரும் விஷத்தை கலந்துவிடக்கூடாது என்பதற்காக, தண்ணீரை நிரப்ப ஒரு வழியும், வெளியேற்ற மற்றொரு வழியும் அமைக்கப்பட்டுள்ளதால், இதனை மாய நீர் குவளை என்பதாக விளக்கினார் அவர்.

கரிகிரி மாயக்குவளை! பழங்கலையின் நிகழ் மிச்சம்!

சுடுமண்ணால் ஆன இக்குவளையின் உள்ளே ’U’ வடிவ பைப் அமைப்பு வைக்கப்பட்டு, அதன் ஒரு முனை நீரை உட்செலுத்தவும், மறு முனை நீரை வெளியாக்கவும் பயன்படுகிறது. உள்ளே செல்லும் நீர் அந்த ’U’ வடிவ பைப்பின் மையப்பகுதிக்கு சென்று தேங்கி விடுவதால், சென்ற பாதையில் வெளியேறுவது இல்லை. மாறாக வெளியே செல்வதற்கென்று உள்ள வழியாக மட்டுமே நீர் வெளியாகிறது.

கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இதன் செயல் விளக்கத்தை, பார்வையாளர்களுக்கு சொல்லும் காப்பாட்சியர் சரவணன், இந்த தொழில்நுட்பம் எங்கிருந்து வந்தது என்று உறுதிபடக் கூற முடியாவிட்டாலும் பெர்சிய தொழில்நுட்பமாக இருக்கலாம் என்கிறார். மாயாஜாலங்களை சினிமாவில் மட்டுமே பார்த்துப்பழகிய நமக்கு, இத்தகைய நுணுக்க வேலைபாடுகள் கொண்ட மாயக்குவளைகளை அருங்காட்சியகங்களில் மட்டுமே பார்க்க வாய்த்திருக்கிறது.

இதையும் படிங்க: பெண்களின் வாழ்க்கையை மாற்றிய முடிவு!

Last Updated : Nov 21, 2020, 2:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details