தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: ரப்பர் படகு மக்கள் மீட்பு

By

Published : Nov 26, 2021, 9:55 AM IST

திருநெல்வேலியில், பெய்த கனமழையால் கிருஷ்ணாபுரம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் தத்தளித்த பொதுமக்களை ரப்பர் படகு மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

ரப்பர் படகு மூலம்
ரப்பர் படகு மூலம்

திருநெல்வேலி: வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாகதிருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று (நவம்பர 25) பிற்பகல் முதல் தொடர் மழை பெய்துவருகிறது. குறிப்பாக பிற்பகல் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாகக் கனமழை பெய்தது. தொடர்ந்து மாநகர்ப் பகுதியில் விட்டு விட்டு லேசான மழை பெய்வதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில், பாளையங்கோட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் நெசவர் காலனி தாழ்வான பகுதி என்பதால் பிற்பகல் பெய்த கனமழையால் அங்குள்ள குடியிருப்புகளைச் சூழ்ந்தபடி மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

நெல்லையில் பெய்த கனமழை

இதற்கிடையில் அருகிலிருந்த குளத்தின் தாழ்வான பகுதியிலிருந்தும் நீர் வெளியேறிக் குடியிருப்புகளுக்குள் புகுந்ததன் காரணமாக அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.

தொடர்ந்து மழை நீடித்ததால் அச்சத்தில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே வந்துள்ளனர். ஆனால் தெருவில் சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கு நீர் ஓடியதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

5 நாள்களுக்கு கனமழை

இது குறித்து தகவலறிந்து பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று ரப்பர் படகு மூலம் நீரில் தத்தளித்த பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

நெல்லையில் பெய்த கனமழை

இதனையடுத்து பலரது வீடுகளில் முற்றிலும் நீர் புகுந்ததால், அங்கு வசித்த அனைவரும் பாதுகாப்பாகப் படகு மூலம் வெளியேற்றப்பட்டனர். குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 40 பேர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு அருகில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தற்போது பத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். மாவட்ட திட்ட இயக்குநர் பழனி சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

தொடர்ந்து அந்தப் பகுதியில் குளத்திலிருந்து நீர் வெளியேறாமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சம் பாளையங்கோட்டையில் 90 மிமீ மழையும், நெல்லை மாநகரில் 64 மிமீ மழையும், சேரன் மகாதேவியில் 53 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

நெல்லையில் பெய்த கனமழை

அடுத்த ஐந்து நாள்களுக்கு நெல்லை உள்பட தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ள நிலையில் முதல் நாள் மழைக்கே நெல்லையில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு ஏடிஜியாக வரும் ஐபிஎஸ் ரவிச்சந்திரன்!

ABOUT THE AUTHOR

...view details