தமிழ்நாடு

tamil nadu

முன்னாள் சபாநாயகரை மேடையேற்றி மரியாதை செய்த இந்நாள் சபாநாயகர்!

By

Published : May 14, 2021, 11:43 AM IST

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனை அரசு விழாவில் மேடையேற்றி, தற்போதைய சபாநாயகர் அப்பாவு மரியாதை செய்த சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அப்பாவு
அப்பாவு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு பொறுப்பேற்றார். திருநெல்வேலி மாவட்டத்தில் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படாத சூழ்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மிகவும் எளிய மனிதராக அறியப்படும் சபாநாயகர் அப்பாவு, தனது எளிமைக்கு மேலும் உதாரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். தான் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நேற்று(மே.13) தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்துக்கு அப்பாவு வந்தார். ஆனால் வந்தவுடன் வீட்டுக்குச் செல்லாமல் நேராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனோ தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, காவல் உயர் அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர்.

ஆய்வுக் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் இருந்த மேடையில் சபாநாயகர் அமைச்சர்கள், அலுவலர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, அவரவர் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். கூட்டம் தொடங்கியதும் மாவட்ட ஆட்சியர் பேசிக் கொண்டிருந்தபோது, சபாநாயகர் அப்பாவு திடீரென எழுந்து நின்று முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் எங்கே என்று தேடினார்.

அதாவது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். மூத்த அரசியல்வாதி என்ற முறையிலும், ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர் என்ற முறையிலும் நேற்று(மே.13) நடைபெற்ற கூட்டத்திற்கு வருகை தந்தார்.

அரசு சார்ந்த பொறுப்பில் இல்லாததால், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தானாகவே ஒதுங்கிக் கொண்டு மேடைக்கு எதிர்புறம் யாருக்கும் தெரியாதபடி அமர்ந்திருந்தார். பிறகு சபாநாயகர் அப்பாவு எழுந்து நின்று, அவரை தேடியதும் வெளியே வந்தார். உடனே அப்பாவு அவரை கையோடு மேடைக்கு அழைத்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அருகில் இருக்கையில் அமர வைத்தார்.

சபாநாயகராக அப்பாவு பொறுப்பேற்ற பிறகுச் சொந்த மாவட்டத்தில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் சிறிதளவுகூட ஆரவாரம் இல்லாமல் விழாவில் கலந்து கொண்டதோடு, ஒதுங்கி நின்ற முன்னாள் சபாநாயகரை மேடையில் ஏற்றி மரியாதை கொடுத்த சம்பவம் அங்கிருந்த கட்சியினர் மற்றும் அலுவலர்களை நெகிழச் செய்தது.

ABOUT THE AUTHOR

...view details