தமிழ்நாடு

tamil nadu

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு - ஆட்சியர் தகவல்

By

Published : Sep 2, 2020, 10:37 PM IST

சேலம்: கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர்
சேலம் மாவட்ட ஆட்சியர்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் இன்று (செப்டம்பர் 2) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, "சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் 56க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்பனர், உதவியாளர் உள்ளிட்ட 280க்கும் மேற்பட்ட நபர்கள் 56 குழுக்களாக அமைத்து 60 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடர்ந்து 21 நாட்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன.

இவை தவிர சேலம் மாவட்டம் முழுவதும் இச்சிறப்பு மருத்துவ முகாம்கள் ஊரக - நகர்புற பகுதிகளிலும் தொடந்து நடத்தப்பட்டு வருகின்றன.

மாவட்டம் முழுவதும் நாள்தோறும் 230க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இச்சிறப்பு மருத்துவ முகாம்களில் நோய் அறிகுறி உள்ள நபர்கள் கண்டறியப்பட்டால் அந்நபர்களுக்கு இந்நோயின் தன்மை குறித்து கண்டறிவதற்காக மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் எக்ஸ்ரே - இரத்த பரிசோதனை கருவிகளுடன் கூடிய சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதை தவிர மாவட்டம் முழுவதும் உள்ள 9 அரசு மருத்துவமனைகள், 20 நகர்புற அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள் மற்றும் 87 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் எக்ஸ்ரே - இரத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் நாள்தோறும் நடைபெற்று வரும் இச்சிறப்பு மருத்துவ முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தொடர்ந்து கண்காணித்திட 10க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள துணை ஆட்சியர்கள், துறை முதன்மை அலுவலர்கள் இச்சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று முகாம் சிறப்புடன் நடைபெறுவதை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபர்களில் நோய் தொற்றின் தன்மைக்கேற்றவாறு அரசு மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், இந்நோய் தொற்றின் தாக்கம் குறைவாக உள்ள நபர்களை தங்கவைத்து சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக மாவட்டம் முழுவதும் 12க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர கூடுதலாக ஆற்றுப்படுத்துதல் மையங்கள் அமைப்பதற்கும் தொடந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் இந்நோய் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். " என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் இயக்குநர்/ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அசோக்குமார், மண்டல மேலாளர் (டாஸ்மாக்) ராஜ்குமார், சேலம் மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சந்திரமோகன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அன்பு, இணை இயக்குநர் (நலப் பணிகள்) டாக்டர்.மலர்விழி வள்ளல், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.பாலாஜிநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details