தமிழ்நாடு

tamil nadu

வாய்க்கால் புறம்போக்கு இடத்தில் எந்தவித கட்டுமான வரைபடத்திற்கு அனுமதி தரக்கூடாது - நீதிமன்றம்

By

Published : Jun 26, 2021, 9:25 PM IST

வாய்க்கால் புறம்போக்கு இடத்தில் எந்தவித கட்டுமான வரைபடத்திற்கு மாநகராட்சி அனுமதி தரக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாய்க்கால் புறம்போக்கு இடம்
வாய்க்கால் புறம்போக்கு இடம்

திருச்சி ரெட்டைவாய்க்கால் ரோட்டைச் சேர்ந்த அண்ணாமலை, ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், எங்கள் குடியிருப்புப் பகுதியில் 4,608 சதுர அடியில் பூங்காவிற்காக ஒதுக்கி மணிகண்டம் ஊராட்சியில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் 23 அடி சாலைக்காக ஒதுக்கப்பட்டது.

பின்னர் இந்த இடத்தை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இதனால், பூங்காவிற்கான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு பெற்று கட்டுமானப் பணி நடக்கிறது. இது குறித்து உடனடியாக திருச்சி மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனடிப்படையில் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டுமென மாநகராட்சி உதவி கமிஷனர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதையடுத்து ஆக்கிரமிப்பாளர் தரப்பில் திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே, வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான நடவடிக்கை எடுக்க முடியாது என மாநகராட்சி உதவி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இது சட்டவிரோதம். எனவே, அவரது உத்தரவை ரத்து செய்யவும், பூங்கா இடத்திலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர்.

மனுதாரர் வக்கீல் நிர்மல்குமார் ஆஜராகி, மணிகண்டம் ஊராட்சிக்கு கடந்த 1988இல் ஒப்படைக்கப்பட்டது. மாநகராட்சியான பிறகு அலுவலர்கள் முறையாகப் பராமரிக்கவில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வாய்க்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்து
எப்படி சிவில் வழக்கு தொடர முடியும். சம்பந்தப்பட்ட இடம் வாய்க்கால் புறம்போக்கு என ஆவணங்களில் உள்ளது.

இது அரசாங்கத்திற்கு சொந்தமான நிலம். இது நீர்ப்பிடிப்பு சம்பந்தப்பட்ட பகுதியாகும். எனவே, மனுதாரர் தரப்பு சம்பந்தப்பட்ட சிவில் வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அந்த சிவில் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முறையிட வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக அனுபவித்தில் உள்ளதாக எதிர்தரப்பினர் கூறுகின்றனர்.

எனவே சிவில் வழக்கில், இது அனுமதியற்ற கட்டுமானம் அல்ல என சிவில் வழக்கில் முடிவாகும் வரை வாய்க்கால் புறம்போக்கு இடத்தில் எந்தவித கட்டுமான வரைபடத்திற்கும் அனுமதி மாநகராட்சி தரப்பில் அனுமதி தரக் கூடாது. இதை அவ்வப்போது ஆய்வுசெய்து உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details