தமிழ்நாடு

tamil nadu

மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

By

Published : Aug 25, 2022, 10:48 AM IST

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், அருணா அலாய்ஸ் ஸ்டீல் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில்,
"தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் இல்லை.

இந்நிலையில் தமிழ்நாட்டின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும் நிலையில் ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம்.

எனவே, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தொழில்நுட்ப உறுப்பினர் 17.3.2022ல் ராஜினாமா செய்தார். சட்டத்துறை உறுப்பினர் 5.5.2022ல் ஓய்வு பெற்றார். இரு காலியிடத்தை அரசு ஒரே நேரத்தில் நிரப்பியிருக்கலாம்.

ஆகவே, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடை உத்தரவு சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை அமலில் இருக்கும். அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம். மனுதார்கள் தங்களின் ஆட்சேபனைகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம்" என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நாகர்கோவில் காசியின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்

ABOUT THE AUTHOR

...view details