தமிழ்நாடு

tamil nadu

நுகர்வோர் நீதிமன்றங்களில் பதவிகளை நிரப்பக்கோரிய வழக்கில் அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு!

By

Published : Mar 2, 2021, 6:13 PM IST

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கையை அறிக்கையாகத் தாக்கல்செய்யுமாறு நுகர்வோர் நீதிமன்றத் தலைவர், உறுப்பினர் தேர்வுக்குழுவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai HC bench order on case of filling vacancies in Consumer court
Madurai HC bench order on case of filling vacancies in Consumer court

மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் அருண்சுவாமிநாதன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்துள்ளார். அதில், “தமிழ்நாடு முழுவதும் 32 நுகர்வோர் நீதிமன்றங்கள் உள்ளன. நுகர்வோர் உரிமைச் சட்டத்தின்படி, நுகர்வோர்களுக்குச் சேவை குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக வழக்குரைஞர்கள் மூலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யலாம்.

தொலைத்தொடர்பு, வங்கிகள், காப்பீடு, மின்வாரியம், மருத்துவம் எனப் பலதரப்பட்ட துறைகளின் சேவை குறைபாடுகள் குறித்து வழக்குகளைத் தொடர அனுமதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் ஒரு தலைவர், இரண்டு உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அந்த வகையில், நான் சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகளைத் தாக்கல் செய்துவருகிறேன். மதுரை மாவட்ட நீதிமன்றத் தலைவர், உறுப்பினர்கள் இல்லாததால் பெரும்பாலான நாள்களில் இந்த நீதிமன்றங்கள் செயல்படுவதில்லை.

இந்தப் பதவிகள் காலியாக உள்ள நீதிமன்றங்களுக்கு வேறு மாவட்டத்தில் பணியாற்றும் நுகர்வோர் நீதிமன்றத் தலைவர், உறுப்பினர்கள் வாரத்தில் ஒருநாள் மட்டும் வந்து வழக்குகளை ஒத்திவைத்துவிட்டுச் செல்கின்றனர்.

இதனால் ஒவ்வொரு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலும் ஏராளமான வழக்குகள் தீர்வுகாணப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே காலியாக உள்ள நுகர்வோர் நீதிமன்ற தலைவர், உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. நுகர்வோர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கையை அறிக்கையாகத் தாக்கல்செய்யுமாறு நுகர்வோர் நீதிமன்றத் தலைவர், உறுப்பினர் தேர்வுக்குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டதுடன் விசாரணையை மார்ச் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க...டிஆர்பி மோசடி; பார்த தாஸ் குப்தாவுக்கு பிணை!

ABOUT THE AUTHOR

...view details