தமிழ்நாடு

tamil nadu

இரட்டைக் குவளை போன்று இரட்டை குழாய் முறை... மதுரையில் தொடரும் தீண்டாமை அவலம்

By

Published : Sep 10, 2019, 4:05 PM IST

மதுரை: இரட்டைக் குவளை முறை போன்று இரட்டைக் குழாய் முறை இருப்பது பட்டியலின மக்களை வேதனையடையச் செய்துள்ளது.

madurai

மதுரை மாவட்டம் காயாம்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஆதிக்க சாதியினர் மற்றும் பட்டியலின மக்களுக்கென இரண்டு வெவ்வேறு திருகு குழாய்கள் அமைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி காளிதாஸ் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "இங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இரண்டு திருகு குழாய்கள் இருந்து வருகிறது. ஒரு திருகு குழாயின் வழியே ஆதிக்க சாதியினர் வாழ்கின்ற தெருக்களுக்கும் மற்றொரு திருகு குழாய் வழியே பட்டியலின மக்கள் வாழ்கின்ற தெருக்களுக்கும் இங்கிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த முறையை அகற்றக்கோரி பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இரட்டை குழாய் முறை

அதுமட்டுமன்றி இருக்கின்ற தண்ணீரைப் பகிர்ந்து அளிப்பதிலும் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இதன் காரணமாக பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தடுக்கவேண்டும்" என வேதனையுடன் பகிர்ந்துகொண்டார்.

ஊர் பொதுமக்கள் வேதனை

அதே ஊரைச் சேர்ந்த வைதேகி என்ற பெண்மணி பேசுகையில், "எங்கள் தெருவில் அமைக்கப்பட்ட குழாய்கள் அனைத்தும் பள்ளத்தில்தான் உள்ளன. அதற்குள் இறங்கிதான் நாங்கள் தண்ணீர் பிடிக்க வேண்டும். காலையில் தண்ணீர் வரும் நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதா அல்லது தண்ணீர் பிடிப்பதா என்ற போராட்டம் ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது. ஆகையால் இந்த பிரச்னை தீர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதனையடுத்து, சரவணன் என்ற இளைஞர் பேசுகையில், "புதியதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்த பின்னர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் புதிய குழாய்கள் அமைக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து எங்கள் பகுதிக்கும் மேடாக, குழாய்களை அமைத்துத் தர வேண்டும்" என்றார்.

காயாம்பட்டி கிராமத்தில் மட்டும் ஏறக்குறைய 350 குடும்பங்கள் உள்ளன. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு நிலவும் தண்ணீர் பிரச்னையை சீராக வைப்பதோடு இரட்டை குழாய் முறையை உடனடியாக நீக்கி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே அந்த மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details