தமிழ்நாடு

tamil nadu

மாரிதாஸ் போல சு. சுவாமி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா? - நீதிபதியின் அடுக்கடுக்கான கேள்வி

By

Published : Dec 13, 2021, 10:21 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தின் போதும், அது கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்ததே, முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சுப்பிரமணிய சுவாமியும் சந்தேக கேள்வியை எழுப்பியிருந்தாரே? அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாரிதாஸ் போல சுப்பிரமணிய சுவாமி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா?
மாரிதாஸ் போல சுப்பிரமணிய சுவாமி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா?

மதுரை: குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அலுவலர்கள் உள்பட 14 பேர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில், பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணமடைந்தனர்.

இது குறித்து பிரபல யூ-ட்யூபரும், பாஜக ஆதரவாளருமான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "திக, திமுக ஆதரவாளர்கள் கேலி செய்யும்விதமாகப் பதிவிடுகின்றனர். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை" எனப் பதிவிட்டர்.

மாரிதாஸ் ட்விட்டர் பதிவு

மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும் இக்கருத்தை பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து திமுகவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, காவல் துறையினர் (டிச.9 தேதி) மாரிதாஸ் வீட்டில் வைத்து கைது செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

கருத்துச் சுதந்திர சிறகுகள் காயப்பட்டுள்ளன

இந்நிலையில், இந்த வழக்கில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது வழக்கு விசாரணை தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாரிதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று (டிச.13) விசாரணைக்கு வந்தது.

மாரிதாஸ் கைது நீதிபதி கேள்வி

அப்போது, கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு வழக்குப் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டதால், கருத்துச் சுதந்திர சிறகுகள் காயப்பட்டுள்ளன என மாரிதாஸ் தரப்பு வாதம் செய்தது.

அரசியல் சூழ்ச்சியோடு ட்விட் செய்துள்ளார்

இதனையடுத்து, "தமிழ்நாடு அரசு தரப்பில், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ட்விட்டை பார்த்தால் என்ன நினைப்பார்கள்? மாரிதாஸ் தமிழ்நாட்டின் நேர்மைத் தன்மை குறித்தே கேள்வி எழுப்பியிருக்கிறார். மனுதாரர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர். அவர் தமிழ்நாடு அரசிற்கு எதிராக, அரசியல் சூழ்ச்சியோடு இந்த ட்விட்டை செய்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணத்தின் போதும்

இந்தநிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தின் போதும், அது கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்ததே என்றும் முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சுப்பிரமணிய சுவாமியும் சந்தேக கேள்வியை எழுப்பியிருந்தாரே? அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்த வழக்கில் சிறையிலிருக்கும் மாரிதாஸ், தன் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை கோரிய வழக்கை நாளைக்கு (டிச.14) ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுவிட்டுள்ளது.

ஃபாரின் மதவெறி திமுக சிற்றரசு ஒழிக! - மாரிதாஸ் ஆதரவாளரால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details