தமிழ்நாடு

tamil nadu

கனமழையால் வீடுகள் இடிந்து சேதம்: அரசு அலுவலகங்களில் மக்கள் குடியேறிய அவலம்!

By

Published : Nov 27, 2021, 2:16 PM IST

மேலூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களில் மக்கள் குடியேறிய அவலம் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் வீடுகள் இடிந்து சேதம்
மதுரையில் வீடுகள் இடிந்து சேதம்

மதுரை:மேலூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, தும்பைப்பட்டி, கீழவளவு, கீழையூர், மேலவளவு, சென்னகரம்பட்டி, அழகர்கோவில், கிடாரிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்துவருகிறது.

இதனால் அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி அருகில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

மதுரையில் வீடுகள் இடிந்து சேதம்

இந்நிலையில், நேற்றிரவு (நவம்பர் 26) பெய்த கனமழை காரணமாக, கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம், கருங்காலக்குடி அருகே அய்யாபட்டி, மேலவளவு அருகே உள்ள கண்மாய்பட்டி, கச்சிராயன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய் நிரம்பி உடைப்பு ஏற்பட்டு அருகிலுள்ள விவசாயம் விளைநிலங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீர் வெள்ளம்போல் புகுந்துள்ளது.

இதனால், இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வருவாய்த் துறையினர், காவல் துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வுசெய்து பாதிக்கப்பட்ட மக்களை, அருகில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களில் தங்கவைத்தனர்.

மதுரையில் வீடுகள் இடிந்து சேதம்

மேலும், இந்த கனமழை காரணமாக மலம்பட்டியைச் சேர்ந்த கணேசன், ஒட்டக் கோவில்பட்டியைச் சேர்ந்த அடக்கன், ஆலம்பட்டியைச் சேர்ந்த ராஜா உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்டவர்களுடைய வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமாகின. இதில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நீர்நிலைகள், நீர்வரத்துப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நீட் விலக்கு மசோதா: ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details