தமிழ்நாடு

tamil nadu

ஆசிரியர் தொடர் பாலியல் தொல்லை: கோவை மாணவி தற்கொலை

By

Published : Nov 12, 2021, 4:28 PM IST

Updated : Nov 17, 2021, 1:44 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவி ஆசிரியரின் தொடர் பாலியல் தொல்லையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

student-commits-suicide
student-commits-suicide

கோவை: தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவி ஒருவர் சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து பள்ளியிலிருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்கி வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முயன்றுவந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (நவம்பர் 11) வீட்டில் தனியாக இருந்த மாணவி, அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

முதல்கட்ட தகவல்

இதனிடையே மாணவி பயின்றுவந்த பள்ளியில் ஒரு ஆசிரியரால் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாகியதாகத் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக, அந்த பள்ளி ஆசிரியர் மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

ஆசிரியர் பாலியல் தொல்லை - மாணவி தற்கொலை

போராட்டம்

இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் தங்கள் மகளுக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நடந்துவிடக்கூடாதென விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளனர். மேலும் மாணவி எழுதிவைத்திருந்ததாகக் கூறப்படும் கடிதம் ஒன்றைக் காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


இதனிடையே மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட ஆசிரியரைக் கைதுசெய்ய வலியுறுத்தியும் ஆசிரியரின் புகைப்படத்தைக் கிழித்தெறிந்தும், காலணியால் அடித்தும் போராட்டம் நடத்தினர்.


ஆசிரியர் கைது

இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்த ஆசிரியரைக் கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது

Last Updated : Nov 17, 2021, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details