தமிழ்நாடு

tamil nadu

'வீட்டிலிருந்தே வருமானம்' - விளம்பரத்தை நம்பி வில்லங்கத்தில் சிக்கிய நபர்

By

Published : Jun 20, 2021, 10:31 AM IST

போலி விளம்பரத்தை நம்பி தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இளைஞர் மோசடி கும்பலிடம் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து அந்நிறுவனம் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்து ஏமாற்றியுள்ளது.

youth  cheated
youth cheated

சென்னை: கரோனா ஊரடங்கின் காரணமாக பலர் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கும் வகையில் வேலைகளைத் தேடி வருகின்றனர். அந்த வகையில், ஃப்யான் டெக் எண்டர்பிரைசஸ் (Fyon Tech Enterprises) என்ற தனியார் நிறுவனம் டேட்டா என்ட்ரி பணிக்கு ஆட்கள் தேவையென்றும் வீட்டிலிருந்தே அதிக வருமானம் ஈட்டலாம் எனவும் இணையத்தில் விளம்பரம் செய்தது.

இதை நம்பி அந்நிறுவனத்தை அணுகியவர்களிடம் ஒரு நாள் முதல் ஒரு வாரம் வரை வேலை வாங்கிவிட்டு ஊதியம் கொடுக்காமல், "நீங்கள் செய்த வேலையில் தவறு உள்ளது" என்று கூறி அந்நிறுவனம் மிரட்டிப் பணம் பறித்து வந்துள்ளது.

இது குறித்து சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி திவாகர் (24) ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், "ஃப்யான் டெக் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் விளம்பரத்தைக் கண்டு அவர்களை அணுகினேன்.

சைபர் க்ரைம்

இணையவழியில் அப்ளிகேஷனை பூர்த்தி செய்து கொடுத்தால் 20 ரூபாய் வீதம் எத்தனை அப்ளிகேஷன் பூர்த்தி செய்கிறீர்களோ அதற்கு ஏற்றார்போல் வருமானம் பெறலாம் என்று அவர்கள் கூறினர். அவர்களின் அறிவுறுத்தலின்படி நான் ஒரு நாளைக்கு 800 அப்ளிகேஷன்களை பூர்த்தி செய்து அனுப்பினேன்.

ஆனால் அவர்கள் அதற்கான ஊதியத்தை அளிக்காமல் எனது பணியில் தவறிருப்பதாகக் கூறி நஷ்ட ஈடாக 20 லட்சம் ரூபாய் தருமாறு மிரட்டினர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து அவர்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு 1.90 லட்சம் ரூபாய் வரை பணத்தை செலுத்தினேன்.

எச்சரிக்கை: வங்கி கணக்குகளை பின்தொடரும் ‘ஜோக்கர்’ மால்வேர்!

பின்னர்தான் அந்த நிறுவனம் போலியான நிறுவனம் என்பதை அறிந்தேன். அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். திவாகரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஜெ.ஜெ நகர் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து காவல் துறையினர், "பணம் பறிக்கும் நோக்கில் போலியாக வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக அழைப்பார்கள். இதனை நம்பி அந்த லிங்கின் உள்ளே சென்றால் பயனர்களின் முக்கிய டேட்டா,வங்கி கணக்கு எண்ணைத் திருடி பணத்தை எடுப்பர்.

அதே போல் வேலை தருவதாகக் கூறி பயிற்சி கட்டணம், செயல்பாட்டிற்கான கட்டணம் எனக் கேட்கக்கூடிய கம்பெனிகள் போலியானவை. அதை யாரும் நம்ப வேண்டாம்" என எச்சரித்துள்ளனர்.

மேலும் இதுபோன்று ஏமாற்றுபவர்கள் குறித்து புகார் அளிக்க, http://cybercrime.gov.inஎன்ற இணையதள முகவரியையும் சைபர் கிரைம் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு காலத்தில் அதிகரித்த சைபர் குற்றங்கள் - திணறும் காவல்துறை

ABOUT THE AUTHOR

...view details