தமிழ்நாடு

tamil nadu

'இனி தடுப்பூசி முகாம் நடைபெறாது' - சுகாதாரத்துறை தகவல்

By

Published : Apr 9, 2022, 11:09 PM IST

தமிழ்நாட்டில் இனி வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம் இனிமேல் நடைபெறாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தகவல்
தகவல்

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தபோது தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. குறிப்பாக கடந்த 2021 ஜன.16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் தடுப்பூசி போட்டுகொள்ள ஆர்வம் காட்டாமல், தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

அதனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டது. குறிப்பாக அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி முகாம் 24 மணி நேர தடுப்பூசி முகாமாக மாற்றப்பட்டது. அதன் பின், வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

சுகாதாரத்துறை தகவல்: அதன்படி, கடந்த செப்.12ஆம் தேதி முதல் மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் கிட்டதட்ட 50,000 இடங்களிலும் சென்னையில் கிட்டதட்ட 1600 இடங்களில் நடைபெற்றுவந்தது. இதன் தொடர்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தடுப்பூசி முகாமை சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டு தடுப்பூசி முகாம் நடைபெறத்தொடங்கியது. தற்போது வரை தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் கடந்த வாரம் வரை 27 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளன.

இந்த மெகா தடுப்பூசி முகாம்களில் 4 கோடிக்கும் மேற்பட்டவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது. மேலும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வரும் நிலையில் அதற்கென்று வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் சிறப்புமுகாம் கிட்டதட்ட 600 இடங்களில் தமிழ்நாட்டிலும்; சென்னையில் கிட்டத்தட்ட 160 இடங்களிலும் நடைபெற்று வருகிறது.

தளர்த்தப்பட்ட கட்டுபாடுகள்: இந்த நிலையில் தற்போது கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மத்திய அரசு சார்பாக ஊரடங்கு கட்டுபாடுகள் அனைத்தையும் தளர்த்தி கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் போடப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு தளர்த்தி வருகிறது. இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை சார்பாக கடந்த வாரம் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதில் இனி தமிழகத்தில் கட்டாயம் தடுப்பூசி என்ற நிலை இருக்காது. பொதுமக்கள் விரும்பினால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.

இனிமேல் தடுப்பூசி முகாம்கள் கிடையாது:மேலும், வார இறுதி நாட்களில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசனை நடத்திய பிறகு, முகாம்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், இன்று (ஏப்.9) பொது சுகாதாரத்துறை சார்பாக, இனி வார இறுதி நாட்களில் நடைபெறும் தடுப்பூசி முகாமும்; அதேபோல பூஸ்டர் தடுப்பூசி முகாமும் நடைபெறாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், குறைவாக தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள மாவட்டங்களில் அந்த மாவட்ட ஆட்சியர் சிறப்பு முகாம் நடத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் 92 % பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், அதேபோல் 74 % பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details