தமிழ்நாடு

tamil nadu

மோடி எழுந்து நின்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

By

Published : May 27, 2022, 8:19 PM IST

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி பங்கேற்ற பல்வேறு நலத்திட்டங்களின் தொடக்க விழாவில் ’தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலுக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காத சம்பவம் வருத்தத்துக்குரியது என மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி
அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மே 27) "பாரத் இணைய திட்டம்" தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்ததாவது, 'கடந்த ஆட்சியில் "பாரத் இணைய திட்டம்" கிடப்பில் போடப்பட்டது; ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, ஊராட்சிப் பகுதிகளுக்கும் இணைய வசதிகளை அளிக்கும் வகையில் மூன்று கட்டங்களாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.

"தமிழ்நெட்" கிராமங்களுக்கு இணைய சேவை: இதன்பொருட்டு, தற்போது நான்காவது மற்றும் இறுதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின் கிராமங்களில் தடையில்லா இணைய சேவையைப் பெற முடியும்; மாணவர்கள், பணி செய்பவர்கள் எனப் பலருக்கும் பயனுள்ளதாக அமையும். இந்தத் திட்டத்திற்கு "தமிழ்நெட்" எனப் பெயர் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

"பாரத் இணைய திட்டம்" தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழாதது வருத்தமளிக்கிறது:'நேற்றைய விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காதது வருத்தத்திற்கு உரியது. அனைவரும் எழுந்து நின்றபோது நிதின் கட்கரியும் எழுந்து நின்றிருக்க வேண்டும். அத்துடன் கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் அவர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததும், நேற்று அவர் நடந்துகொண்ட விதமும் எதேச்சையாக நடந்ததாக தெரியவில்லை’ என அமைச்சர் மனோ தங்கராஜ் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், விரைவில் இ-சேவை 2.0 திட்டம் நடைமுறைப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

அண்ணாமலை லாஃபிங் ஸ்டார்:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 26) மேடையில் தமிழ்நாடு நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடிக்கு நேரடியாகவே முன் வைத்தார். ஆனால், இதனை அண்ணாமலை கொச்சைப்படுத்தி பேசுவது அழகல்ல. அவர் ஒரு LAUGHING STAR ஆவார்’ எனவும் அமைச்சர் விமர்சித்தார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் 31,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை நேற்று (மே 26) தொடங்கி வைப்பதற்காக, சென்னை வருகை தந்த பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால், காணொலி மூலமாக பங்கேற்ற மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மட்டும் எழுந்து நிற்கவில்லை. மாறாக, அவர் தனக்கான இருக்கையில் கடைசி வரையில் அமர்ந்தே இருந்தார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமைச்சர் நிதின் கட்கரி;பொறுப்பற்ற செயலை மக்களுக்கு விளக்கவேண்டும்: முன்னதாக அமைச்சர் மனோ தங்கராஜ் "தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும்போது எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்த, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார். தன் ஆணவ, பொறுப்பற்ற செயலுக்கான காரணத்தை, அமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும்" என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'தமிழ் மொழியையும், கலாசாரத்தையும், மேம்படுத்த இந்திய அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறது' - பிரதமர் மோடி!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details