தமிழ்நாடு

tamil nadu

சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனையிலிருந்து தப்பியோடிய உகாண்டா பெண்மணி - போலீசார் தீவிர விசாரணை!

By

Published : Jul 23, 2022, 5:42 PM IST

சார்ஜாவில் இருந்து சென்னை வந்த உகாண்டாவை சேர்ந்த பெண் ஒருவர், விமான நிலைய குடியுரிமை சோதனையிலிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

airport
airport

சென்னை: கடந்த 20ஆம் தேதி, சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பினர். அந்த விமானத்தில் வந்த 186 பயணிகளுக்கும் குடியுரிமை சோதனை முடிந்துவிட்டதா? என்று அதிகாரிகள் சரிபார்த்தனர்.

அப்போது ஒரு பயணிக்கு சோதனை நடக்காதது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பயணிகளின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, உகாண்டா நாட்டை சேர்ந்த ஒரு பெண் பயணியின் பாஸ்போர்ட், குடியுரிமை அலுவலரின் மேஜையில் கேட்பாரற்று கிடந்தது. அதை ஆய்வு செய்ததில், உகாண்டாவிலிருந்து, சார்ஜா வழியாக 3 பெண்கள் உள்பட 7 பேர் கொண்ட குழுவினர், சென்னைக்கு வந்துவிட்டு டெல்லி செல்ல இருந்ததாகவும், அதில் ஒருவர்தான் அந்த பெண்மணி என்றும் தெரியவந்தது. அந்த பெண்மணி மட்டும் குடியுரிமை சோதனையை முடிக்காமல் தப்பியோடிவிட்டார் என தெரியவந்தது.

இதையடுத்து உள்நாட்டு விமான நிலையத்திற்கு சென்ற அதிகாரிகள், அந்த குழுவில் இருந்த ஆறு பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண்மணி தங்களோடு வந்தார், வேறு எந்த விவரமும் தெரியாது என அவர்கள் தெரிவித்தனர். தப்பியோடிய பெண்மணியை விமான நிலைய அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக தேடி வந்தனர்.

ஆனால், எந்த தகவலும் கிடைக்காததால், சென்னை விமான நிலைய போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், உகாண்டா பெண்மணியை தேடி வருகின்றனர்.

சென்னையில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் விமான நிலையத்தில் குடியுரிமை சோதனையிலிருந்து பெண்மணி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய பெண்மணியின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி; சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை!

ABOUT THE AUTHOR

...view details