தமிழ்நாடு

tamil nadu

மத உணர்வைத் தூண்டும் அரசியலுக்கு தமிழ்நாட்டு மண்ணில் இடமில்லை - டிடிவி தினகரன்

By

Published : Jul 18, 2020, 12:49 PM IST

சென்னை: மறைந்த தலைவர்களை இழிவுபடுத்தியும், மத உணர்வுகளைத் தூண்டியும், அவற்றின் வழியாக அரசியல் லாபம் பார்க்க யார் நினைத்தாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டு மண்ணில் இடமில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dinakaran
ttv dinakaran

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவது, தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர்களை எவ்வித பாரபட்சமுமின்றி பழனிசாமி அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் அரங்கேறிவரும் சம்பவங்கள் அருவெறுக்கத்தக்கவையாக அமைந்திருக்கின்றன. பகுத்தறிவு என்ற பெயரில் மக்களின் மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்தும் விதமாக கந்த சஷ்டி கவசத்தைக் கொச்சைப்படுத்தியது வன்மையான கண்டனத்திற்குரியது, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. அதற்குப் பதிலடி என்ற பெயரில் நபிகள் நாயகத்தை அவமதிப்போம் என்று சிலர் கிளம்புவதையும் ஏற்க முடியாது.

எந்த மதத்தை அல்லது பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மற்ற மதத்தையோ, மக்களின் தொன்று தொட்ட நம்பிக்கைகளையோ தரக்குறைவாக பேசுவதற்கு உரிமையில்லை. எல்லா மதங்களும், சித்தாந்தங்களும் அடிப்படையில் அன்பையும், அனைவரையும் நேசிப்பதையுமே போதிக்கின்றன என்பதை மக்களின் அமைதியைக் கெடுக்க நினைக்கும் இந்த விஷமிகள் உணர வேண்டும். இந்தப் பின்னணியில் கடந்த இரண்டு நாள்களாக கோவையிலும், அதற்கடுத்து திருக்கோவிலூர் அருகிலும் அடுத்தடுத்து தந்தை பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது.

இப்படி மறைந்த தலைவர்களை இழிவுபடுத்தியும், மத உணர்வுகளைத் தூண்டியும், அவற்றின் வழியாக அரசியல் லாபம் பார்க்க யார் நினைத்தாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டு மண்ணில் இடமில்லை. அத்தகைய கீழ்த்தரமான அரசியலை இங்கே யார் முன்னெடுத்தாலும் அவர்களை ஒடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. இது போன்ற நச்சு சிந்தனைகளை முளையிலேயே கிள்ளி எறிவதற்குரிய உறுதியான நடவடிக்கைகளை காவல்துறை தயவு தாட்சண்யமின்றி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பெரியார் சிலை அவமதிப்பு - ராகுல் காந்தி தமிழில் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details