தமிழ்நாடு

tamil nadu

'எடப்பாடி பழனிசாமி வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல' - அமைச்சர் சக்கரபாணி

By

Published : Jul 21, 2022, 9:53 PM IST

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியைத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி வகித்த பதவிக்கும் தற்போது வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணி

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அரிசி ஆலை முகவர்கள் மற்றும் கழக ஆலைகள் மூலம் அரைத்த அரிசியின் தற்போதைய இருப்பே 3 லட்சத்து 23 ஆயிரத்து 554 டன்தான் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய நாளிதழ் ஒன்றில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 92.50 கோடி கிலோ அரிசி மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதைப் பார்த்த இந்திய உணவுக்கழக அதிகாரிகள் இது போன்ற அரிசியை வழங்கிய அரிசி ஆலை முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த அரிசியை மனிதப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

துறை சம்பந்தமாக செய்தியாளர் சந்திப்பின் போது பதில் சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்தேன். அதற்குள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உண்மைக்குப் புறம்பான செய்தியை ஆராயாமல் அதையே அறிக்கையாக விட்டிருக்கிறார். இந்திய உணவுக் கழகத்திடமிருந்து வந்த கடித நகலை உங்களுக்குத் தருகிறேன். அதில் என்ன கூறியிருக்கிறது என்பதை நீங்களே படித்துப் பாருங்கள்.

கும்பகோணத்தில் 92.50 மெட்ரிக் டன், நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள் 92.50 மெட்ரிக் டன், அதாவது 92 ஆயிரத்து 500 கிலோ அரிசி. இதன் மதிப்பு சுமார் 33 லட்சம் ரூபாய் ஆகும். இந்த அரிசியில் 5.2 % சேதமடைந்த அரிசி என்றும், 7% பழுப்பு நிற அரிசி என்றும் சேதமடைந்த அரிசி 5% விழுக்காடுக்கு மேல் இருக்கக் கூடாது; ஆனால் பழுப்பு நிற அரிசி 7% இருக்கலாம் என்றும் 0.2 % கூடுதலாக சேதமடைந்து உள்ளது என்பதால் பொதுமக்களுக்கு அனுப்பக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடைகளுக்கு இந்த அரிசி அனுப்பப்படவில்லை. இதோடு இந்த அரிசியை அனுப்பிய ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பேனைப் பெரிதாக்கி பெருமாள் ஆக்கியது போல் 92,500 கிலோ என்பதை 9 லட்சம் டன் அரிசி என்று ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் அறிக்கை விடுகிறார் என்றால் என்னவென்று சொல்வது?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அரிசி ஆலை முகவர்கள் மற்றும் கழக ஆலைகள் மூலம் அரைத்த அரிசியின் தற்போதைய இருப்பே 3 லட்சத்து 23 ஆயிரத்து 554 டன்தான். தஞ்சாவூரில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் அவர்களையாவது உண்மை நிலை என்னவென்று கேட்டிருக்கலாம் அல்லது வைத்தியலிங்கம் அவர்களையாவது கேட்டிருக்கலாம். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியைத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி வகித்த பதவிக்கும் தற்போது வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஏ.ஆர்.ரகுமான் இசையில் ’செஸ் ஒலிம்பியாட் - 2022’ முழுப் பாடல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details