தமிழ்நாடு

tamil nadu

கோயில் நகைகள் அறங்காவலர்கள் நியமனத்துக்கு பிறகு உருக்கப்படும்- தமிழ்நாடு அரசு

By

Published : Oct 28, 2021, 1:57 PM IST

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் உள்ள நகைகள், அறங்காவலர்கள் நியமனத்துக்குப் பிறகு உருக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டின் கோயில்களில் உள்ள தங்கத்தை உருக்கி கட்டிகளாக மாற்றி வைப்பீடு வைப்பது, கோயில் உபரி நிதியில் கல்லூரி தொடங்குவது உள்பட 112 அறிவிப்புகள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டன.

இந்த அறிவிப்புகளின் அடிப்படையில் கோயில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தடைகோரி மனு

இந்த உத்தரவை எதிர்த்து இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை, டி.ஆர்.ரமேஷ் ஆகியோர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அவரது மனுவில், கோயில்களின் தங்க நகைகளை உருக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளின்படி கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் தங்க நகைகளை உருக்க அனுமதிக்கக் கூடாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

உருக்கப்பட்ட காணிக்கை நகைகள்

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோயில் நகைகளை உருக்கவில்லை என்றும், காணிக்கையாக வந்த நகைகள் தான் உருக்கப்படுவதாகவும், அதை மேற்பார்வையிட உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி இருவரும் அடங்கிய குழு அமைத்து, நகைகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், ஏற்கெனவே நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ததன் மூலம் 11.5 கோடி ரூபாய் வட்டி வருவாயாக கிடைத்துள்ளதாகவும், அது கோயில் நலனுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், கோயில்கள் சீரமைப்புக்கு நிதி தேவைப்படுவதாகவும், கடந்த 11 ஆண்டுகளாக தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

’அறங்காவலர் நியமனத்துக்குப் பிறகு நகை உருக்கப்படும்’

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்க முடியாது எனக் கூறினர். இதையடுத்து, நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் எனக் குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே நகைகள் உருக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்கலாம் எனவும், அறங்காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மற்ற வழக்குகளுடன் சேர்த்து டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:உருமாறிய கரோனா.. இருவர் பாதிப்பு.. மீண்டும் அவசர நிலை?

ABOUT THE AUTHOR

...view details