தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கால் பள்ளி, கல்லூரி விடுமுறை: பெருங்களத்தூரில் குவிந்த மக்கள்

By

Published : Jan 6, 2022, 8:37 PM IST

ஊரடங்கு காரணமாக அனைத்து வகை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது, இதனால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் குவிந்துவருகின்றனர். குறைவான அரசுப் பேருந்துகள் இயக்குவதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

ஊரடங்கால் பள்ளி கல்லூரி விடுமுறை எதிரொலி-  பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள்
ஊரடங்கால் பள்ளி கல்லூரி விடுமுறை எதிரொலி- பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள்

சென்னை:கரோனா, ஒமைக்ரான் பரவலை அடுத்து இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் 50 விழுக்காடு பொதுப் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து வகை பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜனவரி 20 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்துள்ளது.

இதனால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் சென்னை, புறநகர்ப் பேருந்து நிலையங்களுக்குப் படையெடுத்துவருகின்றனர். அதனைத் தொடர்ந்து பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றது.

தென் மாவட்டங்களுக்கு குறைவான பேருந்துகள்

மேலும் அரசுப் பேருந்துகளில் 50 விழுக்காடு பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தாலும் குறைவான அரசுப் பேருந்துகள் மட்டுமே தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுவதால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகள் முண்டியடித்து பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனர்.

மேலும் சில பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து பேருந்துகளில் செல்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாகப் பேருந்தில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பேருந்து நிலையத்தில் இருக்கும் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் கரோனா அச்சம் இன்றி உள்ளனர்.

தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம்


ஏற்கனவே சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பேருந்துகளில் கூட்டம் கூட்டமாகச் செல்வதால் பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகளில் அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டாலும் குறைவான அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்குவதால் தனியார் பேருந்துகளில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே கூடுதலாக அரசுப் பேருந்துகளை தென் மாவட்டங்களுக்கு இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க:திருச்செந்தூர் பாத யாத்திரை செல்பவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் தடை

ABOUT THE AUTHOR

...view details