தமிழ்நாடு

tamil nadu

ஆவடி அருகே மழை நீரை அகற்றாததால் பொதுமக்கள் சாலை மறியல்

By

Published : Jan 2, 2022, 10:55 PM IST

ஆவடி அருகே தேங்கிய மழை நீரை அகற்றக்கோரி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுப்புகளைச் சாலையில் போட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை சமரசம்
காவல்துறை சமரசம்

சென்னை: தமிழ்நாட்டில் சமீப காலங்களாகப் பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிக் காணப்படுகிறது.

இதனால், பாதசாரிகள் நடமாட முடியாமல் அவதிப்பட்டுச் செல்கின்றனர்.

ஆவடி அடுத்த வெள்ளானூர் ஊராட்சி, 1ஆவது வார்டில் பாரதி நகர், பிரியதர்ஷினி நகர், நேரு நகர், ஸ்ரீராம் சமாஜ் நகர் ஆகியப் பகுதிகள் உள்ளன. மேற்கண்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

மேற்குறிப்பிட்டப் பகுதிகளில் வடிகால் வசதி அறவே கிடையாது. மேலும், அப்பகுதியில் சாலைகளும் சரிவரப் போடப்படாமல் குண்டும், குழியுமாக கிடப்பதால் பொதுமக்கள் வெகுநாட்களாக கடும் சிரமத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

வடிகால் வசதி இல்லாததால் தேங்கும் மழைநீர்

மேலும், வடிகால் வசதி இல்லாததால், ஒவ்வொரு பருவமழையின்போது தண்ணீர் வீடுகளைச் சூழ்ந்து பல நாட்களாகத் தேங்கியுள்ளது.

தேங்கிய மழைநீரிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் பொதுமக்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், அவ்வப்போது தேங்கி நிற்கும் தண்ணீரிலிருந்து பாம்புகள், விஷப் பூச்சிகள் படையெடுத்து வீடுகளுக்குள் செல்கின்றன. இது குறித்துக் கடந்த ஆண்டுகளில் பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார் அளித்தும் வந்தனர். இருந்த போதிலும் அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

பொதுமக்கள் சாலை மறியல்

தற்போது கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

அப்போது 23 சென்டி மீட்டர் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்தது. இதனையடுத்து மேற்கண்ட நகர் முழுவதும் வீடுகளை மீண்டும் தண்ணீர் சூழ்ந்து நின்றது. இதனால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இது குறித்து வெள்ளானூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இருந்த போதிலும் ஊராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனையடுத்து, இன்று ஜனவரி 1ஆம் தேதி, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து ஆவடியிலிருந்து வாணியன்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் வெள்ளானூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் சாலையில் தடுப்புகளைப் போட்டு வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்தனர்.

காவல்துறை சமாதானம்

பொதுமக்கள் சாலை மறியல்

இதனால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு, இருபுறங்களிலும் வாகனங்கள் நின்றன. தகவலறிந்து ஆவடி காவல்துறை உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையில் காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், காவல் துறை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் மழைநீரை அகற்றுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால்தான் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து செல்வோம் எனத் திட்டவட்டமாகக் கூறினர்.

இதனையடுத்து காவல்துறை ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதன் பிறகு, அரை மணி நேரப் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆவடி அருகே தேங்கிய மழை நீரை அகற்றக்கோரி மக்கள் நடத்திய திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ராமாயணத்துடன் நேரடித்தொடர்பு கொண்ட அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி உற்சவம்

ABOUT THE AUTHOR

...view details