தமிழ்நாடு

tamil nadu

10ஆம் வகுப்பு தேர்ச்சியானால் அஞ்சல் துறையில் பணி - இதை படிங்கப்பா....!

By

Published : May 20, 2022, 10:51 PM IST

தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 310 காலியிடங்களில் 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், எழுத்துத் தேர்வு ஏதும் இல்லாமல் அஞ்சல் துறையில் வேலைக்கு வரும் 5ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 வகுப்பு தேர்ச்சியானால் அஞ்சல்துறையில் பணி
10 வகுப்பு தேர்ச்சியானால் அஞ்சல்துறையில் பணி

சென்னை: இந்தியா முழுவதும் உள்ள 23 மாநிலங்களில் காலியாக உள்ள அஞ்சல் துறையில் கிராம தபால் ஊழியர்களுக்கான பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், எழுத்துத் தேர்வு ஏதும் இல்லாமல் அஞ்சல் துறையில் பணிநியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்திய அஞ்சல் துறை சார்பில், கிராமங்களில் செயல்படும் கிராம தக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர், மற்றும் உதவி தபால் ஊழியர் பணிக்கு அஞ்சல் துறை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. நாடுமுழுவதும் 38 ஆயிரத்து 926 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் தமிழ்நாட்டில் மட்டும் 4 ஆயிரத்து 310 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 4074 பேரும், தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் ஜூன் 5ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். கிராம அஞ்சலக ஊழியர் பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தின் கீழ் அல்லது அரசுப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். 18 வயது முதல் 40 வயதுள்ளவர்கள் விண்ணப்பிப்பவர்கள் ஆகலாம்.

இதில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் 5 ஆண்டுகள் தளர்வும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. கிராம அஞ்சலக ஊழியருக்கு அடிப்படை ஊதியமாக ரூ.12 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதவி அஞ்சலக ஊழியருக்கு ரூ.10ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிராம அஞ்சலக ஊழியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு எழுத்துத் தேர்வு இல்லை. 10-ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்படும். கிராம அஞ்சல் ஊழியர், உதவி அஞ்சல் ஊழியர் பணிக்கு ஆன்லைனில், https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பினால் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த இரு பணிக்கும் விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கட்டணம் ஏதும் செலுத்தத்தேவையில்லை.

இந்தியா முழுவதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டாலும், அந்தந்த மாவட்ட தலைமை அஞ்சலகங்களுக்கு உட்பட்டு தேர்வுச் செய்யப்படுவர். மாவட்ட அஞ்சல் நிலையத்துக்கு உட்பட்டு, விண்ணப்பித்தவர்களில் அதிகமான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கும். இந்த இரு பணிகளுக்கும் உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கே அதிகமான முன்னுரிமை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அறநிலையத்துறையில் வேலை: ரூ.75ஆயிரம் சம்பளம்... விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம்!

ABOUT THE AUTHOR

...view details