தமிழ்நாடு

tamil nadu

Depreesion Over Bay of Bengal: 'புயலாக உருவாக வாய்ப்பில்லை' - புவியரசன்

By

Published : Nov 18, 2021, 4:45 PM IST

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கிறது எனவும், இது புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Depreesion Over Bay of Bengal, Regional Meteorological Department director puviarasan, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன், Regional Meteorological Department director puviarasan
Depreesion Over Bay of Bengal

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் இன்று (நவ.18) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலு பெற்று, இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, தென்மேற்கு வங்கக் கடல், வட தமிழ்நாடு கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இன்றைய நிலவரம்

இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.19) காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும்.

அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருச்சி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

புயலாக மாற வாய்ப்பில்லை

மேலும், இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கிறது. இது புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை. சாராசரியாக இயல்பை விட இந்த ஆண்டு மழை அதிகமாகக் கிடைத்துள்ளது. சென்னையில் நாளை பிற்பகலுக்குப் பின்னர் மழையின் அளவு குறையத் தொடங்கும்.

வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நவ. 19 நிலவரம்

திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ. 20 நிலவரம்

கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ.21, 22 நிலவரம்

வரும் நவ.21ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவ.22ஆம் தேதி வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று: தென்மேற்கு வங்கக் கடல், தமிழ்நாடு, ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை: தமிழ்நாடு, ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: Red Alert: 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details