தமிழ்நாடு

tamil nadu

ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு உதவ தமிழ்நாடு காவல்துறை அலுவலர்கள் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு

By

Published : Feb 2, 2022, 7:25 PM IST

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணைக்கு, சிபிஐக்கு உதவ தமிழ்நாடு காவல் துறையானது அலுவலர்கள் பட்டியலை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமஜெயம் கொலை வழக்கு
ராமஜெயம் கொலை வழக்கு

சென்னை:கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி திருச்சியில் நடைப்பயிற்சி சென்ற, தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார்.

அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிபிசிஐடி விசாரணை

இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக்கோரி, ராமஜெயம் மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், கொலையாளிகள் யாரும் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட மதுரை உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சிறப்புப் புலனாய்வுக்கு கோரிக்கை

இதையடுத்து கொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் மாநில காவல் துறையே விசாரிக்க வேண்டும் என டிஜிபிக்கு மனு அளித்துள்ளதாகவும், அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

தமிழ்நாடு காவல்துறை அலுவலர்கள் பட்டியலை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி வி. பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதி விசாரணை அலுவலர் சரியான கோணத்தில் விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, சிபிஐ விசாரணை அலுவலரோடு சேர்த்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைக்கும்

வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐக்கு உதவத் தமிழ்நாடு காவல்துறை அலுவலர்கள் பட்டியல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழ்நாடு காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும், விசாரணைக்கு உதவ காவல்துறை அலுவலர்கள் பட்டியலை வழங்குகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து நீதிபதி, பட்டியல்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்துள்ளார்.

இதையும் படிங்க:'திருச்சியில் முட்டி மோதும் மூவர்.. யாரு மேயர்?'

ABOUT THE AUTHOR

...view details