தமிழ்நாடு

tamil nadu

தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

By

Published : Nov 27, 2021, 2:05 PM IST

தனியார் பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குத் தடைவிதிக்கக் கோரிய மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ds
df

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்படுவதை எதிர்த்தும், நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் 1994ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நிரந்தர அங்கீகாரம் வழங்க வகைசெய்யும் 1994ஆம் ஆண்டு அரசாணையைத் திரும்பப் பெற்று, மூன்று ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், நவம்பர் 12ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்துசெய்யக் கோரியும், அதற்குத் தடைவிதிக்க கோரியும், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கப் பொதுச்செயலாளர் கே. பழனியப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டப் பிரிவுகளிலும், மழலையர் - ஆரம்பப் பள்ளிகளுக்கான விதிகளிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை.

அங்கீகாரம் என்பது நிரந்தரமானது, சட்ட விதிகளின்படி அதைத் திரும்பப் பெற முடியுமே தவிர, காலக்கெடு நிர்ணயித்து கட்டுப்பாடு விதிப்பது சட்டவிரோதமானது. சட்டத்தில் சொல்லப்படாத அதிகாரத்தை அலுவலர்கள் செயல்படுத்த முடியாது. தமிழ்நாடு அரசின் இந்த அரசாணை சட்டவிரோதமானது.

பல ஆண்டுகளாக நிரந்தரமாக நடத்தப்படும் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்குவது நிர்வாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசாணைக்குத் தடைவிதிக்க வேண்டும், அதை ரத்துசெய்ய வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர், தொடக்கக் கல்வி துறை இயக்குநருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: Chennai Rain - பாத் டப்பை படகாக மாற்றிய மன்சூர் அலிகான்

ABOUT THE AUTHOR

...view details