தமிழ்நாடு

tamil nadu

கோயில்களின் பாதுகாவலர்கள் நியமனத்தை அந்நிர்வாகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

By

Published : Nov 8, 2021, 7:50 PM IST

கோயில்களில் இரவு நேரப் பாதுகாவலர்கள் நியமனம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட வழக்கில், கோயில் நிர்வாகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனவும் கூறி மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை முடித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்குப் பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோயில்கள் சம்பந்தமான விஷயங்களில் கவனம் செலுத்தாமல் பிற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளது.

கோயில்களில் சிலை திருட்டு

திருநெல்வேலி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், சமீப காலங்களில் தமிழ்நாடு கோயில்களிலிருந்து சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்குப் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தியப் பிரதமர் அமெரிக்கா சென்றிருந்த போது, அங்கு இருந்த புன்னைநல்லூர் சோழர்கால நடராஜர் வெண்கலச் சிலை உள்ளிட்ட 157 சிலைகள் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கோயில்களில் மனித பாதுகாப்பு வேண்டும்

கோயில்களில் போதுமான பாதுகாப்பு இல்லாததே சிலை திருட்டுகளுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், தற்போது கோயில்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், மனிதப் பாதுகாப்பால் மட்டுமே, இதுபோன்ற திருட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.டி.எம். மையங்களுக்குக் கூட இரவு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கியமான கோயில்களுக்குப் பாதுகாவலர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், சில கோயில்களில் இரவு காவலர்கள் நியமிக்கப்பட்ட போதும், அவர்களுக்கு 3,500 முதல் 5,500 ரூபாய் வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கோரிக்கை நிராகரிப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் இரவு பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் எனவும், கோயில்களில் இரவு பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பணி வரன்முறை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கோயில்களில் இரவு நேரப் பாதுகாவலர்கள் நியமனம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனவும் கூறி மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை முடித்தனர்.

நீதிபதிகள் அறிவுரை

அதேசமயம், கோயில்கள் சம்பந்தமாக ஏராளமான வழக்குகள் தொடரப்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், பல முக்கிய பிரச்சினைகள் உள்ள நிலையில் பொதுநலனில் அக்கறை கொண்டவர்கள், கோயில்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், கல்வி, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பிற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் சென்னை மாநகராட்சி!

ABOUT THE AUTHOR

...view details