தமிழ்நாடு

tamil nadu

தஞ்சாவூரில் மறைமுக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு - தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க நோட்டீஸ்

By

Published : Mar 9, 2022, 12:43 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சிக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் நாளை(மார்ச் 10) விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC

கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால், இங்கு மறைமுக தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், மறைமுக தேர்தலை நடத்தக் கோரி தேர்வு நிலை பேரூராட்சியின் எட்டு உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் தனக்கு ஆதரவளித்ததாகவும், மறைமுக தேர்தல் நாளன்று மூன்று திமுக உறுப்பினர்கள் வராததால், கூட்டணி கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுக்களை பறித்து கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

குதிரை பேரமும், கட்சி தாவலும் நடக்கும் வாய்ப்புள்ளதால் போதிய போலீஸ் பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு விளக்கமளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (மார்ச் 10) தள்ளிவைத்தது.

இதையும் படிங்க:மார்ச் 20: பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.. எதற்கு இந்த கூட்டம்.. இதன் பயன் என்ன ?

ABOUT THE AUTHOR

...view details