தமிழ்நாடு

tamil nadu

காவிரி டெல்டாவில் மீண்டும் வரும் ஹைட்ரோகார்பன் அபாயம் - முதலமைச்சர் தடுக்க கோரிக்கை!

By

Published : Mar 10, 2022, 6:39 PM IST

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆக அறிவித்து சட்டம் இயற்றிய பிறகும், ஒ.என்.ஜி.சிக்கு மேலும் 9 கிணறுகளை அமைப்பதற்காக ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு 2025ஆம் ஆண்டு வரை அனுமதித்துள்ள நிகழ்வு காவிரி டெல்டா பகுதியினரை மீண்டும் அபாயத்தில் தள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி டெல்டா
காவிரி டெல்டா

சென்னை:காவிரி டெல்டா பகுதியில் 9 கிணறுகளை அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதியை மேலும் நீட்டிக்கக்கோரி ஒ.என்.ஜி.சி. நிறுவனம் ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்தது. இதைத்தொடர்ந்து, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு 2025ஆம் ஆண்டு வரைக்கும், ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதியை நீட்டிக்கலாம் என ஒன்றிய அரசிற்குப் பரிந்துரை செய்துள்ளது.

இதன் காரணமாக விரைவில் காவிரி டெல்டாவில் மேலும் 9 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கும் நிலை உருவாகியுள்ளது.

காவிரிப் படுகையில் உள்ள,

  • நரிமனம் ( Greater Narimanam ML Block,)
  • அடையக்கமங்கலம் (Adiyakkamangalam ML Block,)
  • நன்னிலம்( Nannilam-I & Nannilam-II ML Block,)
  • களி(Kali & Kali # 6 ML Block, )
  • கூத்தநல்லூர்(Kuthanallur ML Block),
  • கோவில்களப்பல் (Greater Kovilkalapal ML Block)
  • பூண்டி(Pundi ML Block) ஆகிய ஊர்களில் ஏழு எண்ணெய் வயல்கள் உள்ளன.

மேலும் 9 ஹைட்ரோகார்பன்

இவைகளில் மொத்தமாக, 30 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை, கடந்த 2015ஆம் ஆண்டில் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. பின், அனுமதி பெறப்பட்ட 30 கிணறுகளில், 21 கிணறுகளை மட்டுமே ஒ.என்.ஜி.சி. நிறுவனம் தற்போதுவரை அமைத்துள்ளது. இன்னும் 9 கிணறுகள் அமைப்பதற்கானப் பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் விரைவில் முடிவடையவுள்ளதால் மீதமுள்ள 9 கிணறுகளை அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதியை மேலும் நீட்டிக்கக்கோரி ஒ.என்.ஜி.சி. நிறுவனம் ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.

ஒ.என்.ஜி.சியின் விண்ணப்பத்தைப் பரிசீலித்த ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு '2025ஆம் ஆண்டு வரைக்கும் சுற்றுச்சூழல் அனுமதியை நீட்டிக்கலாம்' என ஒன்றிய அரசிற்குப் பரிந்துரை செய்துள்ளதன் காரணமாக விரைவில் காவிரி டெல்டாவில் மேலும் 9 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

இது குறித்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் தெரிவித்த தகவலில், ''தமிழ்நாடு அரசு கடந்த 2020ஆம் ஆண்டே, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' ஆக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது.

இந்தச் சட்டத்தால், புதிதாக அனுமதி பெற்று எந்த ஒரு ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் அமைக்க முடியாது. ஆனால், ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட கிணறுகள் தொடர்ந்து இயங்குவதை இச்சட்டம் கட்டுப்படுத்தாது என்பதால் இச்சட்டத்தால் காவிரி டெல்டாவைப் பாதுகாக்க முடியாது என பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடர்ந்து கூறி வருகிறோம்.

கண்டனத்திற்குரியது

ஏற்கெனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் எங்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம்; காவிரி டெல்டா விவசாயிகளைக் கண்ணின் இமை காப்பதுபோல காப்போம்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஹைட்ரோகார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழுவும் அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில் புதிய கிணறுகளைத் தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி. முயல்வது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

முதலமைச்சருக்கு கோரிக்கை

காவிரி டெல்டாவின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு காவிரி டெல்டாவில் மேற்கொண்டு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முயலும் ஒ.என்.ஜி.சியின் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அறிக்கையின் அடிப்படையில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறோம்' என அதில் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:உ.பி தேர்தல்: லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 8 இடங்களில் பாஜக முன்னிலை

ABOUT THE AUTHOR

...view details