தமிழ்நாடு

tamil nadu

தடை செய்யப்பட்ட ஹெலிகாப்டர் சென்னையில் முடக்கம்

By

Published : Oct 30, 2021, 9:03 PM IST

சென்னையில் ஜெ.மெட்டாடி என்ற தனியார் நிறுவன கிடங்கில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட ஹெலிகாப்டரை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

ஹெலிகாப்டர் சென்னையில் முடக்கம்
ஹெலிகாப்டர் சென்னையில் முடக்கம்

சென்னை:பேங்காக்கை தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனமானது, சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் தனியார் நிறுவன கிடங்கு ஒன்றில் பெல் 214 ரக ஹெலிகாப்டர் வைக்கப்பட்டிருந்தது. சட்டவிரோத பண பரிவர்த்தனை அடிப்படையில் இந்த ஹெலிகாப்டரை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இந்தப் பெல் 214 ரக ஹெலிகாப்டர் தொடர்பான வழக்கு ஒன்று அமெரிக்க ஹோம்லேண்ட் செக்யூரிட்டி அமைப்பில் உள்ளது. தடை செய்யப்பட்ட இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் முடக்கம்

இந்த வழக்கிற்காக அமெரிக்க நீதித்துறை இந்தியாவிடம் சட்ட அடிப்படையிலான உதவி கேட்டதற்கிணங்க, அமெரிக்க நீதித்துறையால் பிறப்பிக்கப்பட்ட வாரண்ட் அடிப்படையில், சென்னையில் வைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டரை முடக்க கூறியுள்ளனர்.

குறிப்பாக, அமெரிக்க நாட்டில் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் இந்த ஹெலிகாப்டரை முடக்கியுள்ளனர். இந்த ஹெலிகாப்டரானது கடந்த 2019ஆம் ஆண்டு, பேங்காக் தலைமையிடமாகக் கொண்ட மரிலாக் ஏவியான் சர்வீஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் ஹமீத் இப்ராகிம், அப்துல்லா ஆகியோர் அமெரிக்காவிலுள்ள ஏ.ஏ.ஆர் கார்ப்ரேஷன் என்ற நிறுவனத்தின் மூலம் வாங்கியுள்ளனர்.

கிராமத்திலிருந்த ஹெலிகாப்டர்

பின்னர், தாய்லாந்து வழியாக கப்பலில் இந்தியாவிற்குள் கொண்டுவந்துள்ளனர். இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்ட ஹெலிகாப்டரை, சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரிலுள்ள பெரம்பாக்கம் சாலை மண்ணூர் கிராமத்தில் இருக்கும் ஜெ.மெட்டாடி என்ற தனியார் நிறுவன கிடங்கில் வைத்துள்ளனர்.

அமலாக்கத்துறையினர் மரிலாக் ஏவியான் சர்விஸஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் வீடு, ஹெலிகாப்டர் வைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன கிடங்கில் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையில் தனியார் நிறுவனக் கிடங்கில் ஹெலிகாப்டர் மாத வாடகை அடிப்படையில் வைக்கப்பட்டிருப்பதை அமலாக்கத்துறையினர் உறுதி செய்தனர்.

தடை உத்தரவு

குறிப்பாக பெல் 214 ஹெலிகாப்டர் பாகம், பாகமாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து ஹெலிகாப்டரை அமலாக்கத்துறையினர் கையக்கப்படுத்தி , அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்ல முடியாத படி தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

அமலாக்கத்துறை ஹெலிகாப்டரை முடக்கியது தொடர்பாக, அமெரிக்க நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளதாகவும், அமெரிக்க நீதித்துறையின் அடுத்தகட்ட உத்தரவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என டெல்லி அமலாக்கத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கேட்பாரற்று விமானக் கழிவறையில் ரூ. 1.41 லட்சம் மதிப்பிலான தங்கம்!

ABOUT THE AUTHOR

...view details