தமிழ்நாடு

tamil nadu

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: கடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழை

By

Published : Jan 1, 2022, 7:14 PM IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி,CHENNAI regional meteorological centre
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன.1) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென் தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜனவரி 2 நிலவரம்

டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நாளை (ஜன.2) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜனவரி 3 நிலவரம்

தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினம் (ஜன.3) லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஜனவரி 4, 5 நிலவரம்

தென்தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜனவரி 4ஆம் தேதி லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஜனவரி 5ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு, பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜனவரி 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மரகத லிங்கத்திற்கு இவ்வளவு மதிப்பா?

ABOUT THE AUTHOR

...view details