தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் தீ விபத்து - 'ஸ்கை லிஃப்ட்' கருவியால் காப்பாற்றப்பட்ட 6 பேர்

By

Published : Mar 16, 2022, 3:26 PM IST

Updated : Mar 16, 2022, 8:45 PM IST

சென்னை அண்ணா நகரில் உள்ள மூன்று மாடிகள் கொண்ட அடுக்குமாடி வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், கட்டடத்தில் சிக்கியிருந்த 6 நபர்களை 'ஸ்கை லிஃப்ட்' கருவி மூலமாக தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

சென்னை அண்ணாநகர் கட்டடத்தில் தீ விபத்து
சென்னை அண்ணாநகர் கட்டடத்தில் தீ விபத்து

சென்னை: அண்ணா நகர் 5ஆவது அவென்யூவில் 'West Wood' என்ற பெயரில் மூன்று மாடிக் கட்டடம் உள்ளது. இதில் தரைதளத்தில் தனியார் நிதி நிறுவன வங்கியும், முதல் தளத்தில் ஐடி நிறுவனமும், இரண்டாவது தளத்தில் இந்தியா புல்ஸ் என்ற மற்றொரு தனியார் நிறுவனமும், மூன்றாவது தளத்தில் கட்டுமான நிறுவனமும் செயல்பட்டு வந்துள்ளது.

இந்த கட்டடத்தில் 50 பேர் பணிபுரிந்து வந்துள்ளனர். முதல் தளத்தில், உள்ள ஐடி நிறுவனத்தில் உள்ள ஏசி-யில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை அணைப்பதற்கு அங்குள்ள தீயணைப்பான் கொண்டு ஊழியர்கள் முயற்சித்துள்ளனர்.

பூட்டியிருந்த 3ஆவது மாடியின் கதவு

ஆனால், தீ மளமளவென வேகமாகப் பரவியதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்தனர். கட்டடத்தில் உள்ள அனைத்து தளங்களுக்கும் தீ பரவியது. இதனையடுத்து, அதில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களும் அலறி அடித்து ஓடினர். தீப்பரவியதால், புகைமூட்டம் வானளவுக்கு எழுந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீவிரமாக தீயை அணைக்க முற்பட்டனர்.

சென்னையில் தீ விபத்து - 'ஸ்கை லிஃப்ட்' கருவியால் காப்பாற்றப்பட்ட 6 பேர்

மூன்றாவது தளத்தில் மாட்டிக்கொண்ட 6 ஊழியர்களை மீட்பதற்கு 'ஸ்கை லிஃப்ட்' கருவி கொண்டு வரப்பட்டது. மாடியிலிருந்து மூன்றாவது மாடிக்குச் செல்லும் கதவு பூட்டப்பட்டிருந்ததால், அவர்களை மீட்பதில் தீயணைப்புத்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. பின்னர், உடனடியாக கதவை உடைத்து 'ஸ்கை லிஃப்ட்' கருவி மூலம் பத்திரமாக தீ விபத்தில் சிக்கிய 6 நபர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். உடனடியாக, விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

60 பேரின் போராட்டம்...

மேலும், தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பாய்ச்சி பின்னர் தீ அணைக்கப்பட்டது. சுமார் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி இந்த தீயை அணைத்தனர். இதில் சுபாஷ் பாபு என்ற தீயணைப்பு வீரர் மூன்றாவது தளத்தில் மாட்டிக்கொண்ட நபர்களை மீட்பதில் முக்கியப் பங்காற்றினார்.

கட்டட வளாகத்தில் தீயணைப்புத்துறையின் விதிகளை முறையாகப் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயில் சிக்கியவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'ஒரே நாடு... ஒரே ரேசன்... தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு' - மக்களவையில் குரல் எழுப்பிய கனிமொழி

Last Updated : Mar 16, 2022, 8:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details