தமிழ்நாடு

tamil nadu

'ஒன்றுக்கும் உதவாத நிதிநிலை அறிக்கை 2021-22!'

By

Published : Feb 2, 2021, 7:54 AM IST

Updated : Feb 2, 2021, 8:09 AM IST

நிதிநிலை அறிக்கை 2021-22இல் பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்யப் பெரிதும் ஒன்றும் இல்லை எனப் பொருளாதார வல்லுநர் ஜோதி சிவஞானம் கருத்து தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்
பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்

சென்னை: மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல்செய்த நிலையில், பொருளாதார வல்லுநரும், பேராசிரியருமான ஜோதி சிவஞானம், இந்த நிதிநிலை அறிக்கை பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்யப் பெரிதாக ஒன்றும் உதவாது என்று கூறியுள்ளார்.

இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், "இன்றைய நிலையைப் பொறுத்தவரையில், தேவைகள் அதிகமாக உள்ளன. மேலும், பெரும்பாலானோர் வேலையையும் வருமானத்தையும் இழந்துள்ளனர். நடுத்தர மக்கள் ஏற்கனவே சேமித்துவைத்திருந்த பணத்தையெல்லாம், கரோனா பெருந்தொற்று காலங்களில் செலவழித்துவிட்டனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு நிறைய நோயாளிகள் உள்ளனர். அதேபோல, குடிபெயர்ந்த தொழிலாளிகள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். நிறுவனங்களும் பெருமளவில் முதலீடு செய்யவில்லை. கடந்த ஏழு-எட்டு வருடங்களாக முதலீடு என்பது சரிந்து கொண்டேவருகிறது. ஏற்றுமதி இறக்குமதியும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது.

எனவே, ஒட்டுமொத்த பொருளாதாரமும் தேவை குறைந்து, வளர்ச்சி குன்றி முடக்கத்தில் இருக்கும்போது, அரசுதான் இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை என்பது நிதிநிலை அறிக்கை மூலம் தெரிகிறது" என்று கூறினார்.

இந்த அறிக்கையில் பொதுச் செலவை அரசு அதிகப்படுத்தவில்லை என்று சொன்ன அவர், அரசு இன்னும் செலவு செய்யக்கூடிய அறிவிப்புகளை வெளியிடவில்லை என்றார். இப்படியுள்ள சூழ்நிலையில், பொருளாதாரம் இன்னும் கீழ்நோக்கிச் சரிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தனது கணிப்பைத் தெரிவித்தார்.

உழுவர்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கை சாதகமாக இருக்குமா என்ற கேள்விக்கு, "வேளாண்மைக்கு ஏற்கனவே பல திட்டங்களை அறிவித்த அரசு, அதற்காகப் பெரியளவில் நிதி ஒதுக்கவில்லை. மேலும், நிதிநிலை அறிக்கை உழவர்களுக்கான குறைந்தபட்ச மானிய விலையைக் கொடுப்பது குறித்து மட்டுமே சுட்டிக்காட்டுகிறது.

மத்திய அரசு, 2020-21 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி வேளாண்மைக்காக ஒதுக்கீடு செய்யும் என்று அறிவித்திருந்தது. ஆனால், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில், 10 ஆயிரம் கோடியைக் குறைத்து, ஒரு லட்சத்து 46 ஆயிரம் கோடியாக வெளியிடப்பட்டது" என்றார்.

அரசு பணம் ஒதுக்காமல், எந்த ஒரு திட்டத்தையும் முழுமையாகச் செயல்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், வேளாண் சட்டத்திற்கு எதிராக உழவர்கள் போராடும் நேரத்தில், அதுகுறித்து எந்த ஒரு கருத்தும் சொல்லப்படவில்லை என்பது பல கேள்விகளை எழுப்புவதாக குறிப்பிட்டார்.

வங்கித் துறையைக் குறித்துப் பேசுகையில், "வங்கிகளின் வாராக்கடன் ஒன்பது விழுக்காட்டிலிருந்து 17 விழுக்காடு வரை இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. அதற்கு, அரசுதான் போதுமான நிதி ஒதுக்க வேண்டும். ஏனெனில், அரசுதான் வங்கிகளுக்கெல்லாம் உரிமையாளர். வாராக்கடனைச் சரிசெய்ய ஒரு நிறுவனத்தைக் கொண்டு வரலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. எனினும் இது நடைமுறையில் சாத்தியமல்ல. பல வெளிநாடுகளில், இந்த மாதிரியான திட்டம் தோல்வியடைந்துள்ளது.

இன்றைய நிலையில், பொதுத் துறை வங்கிகள் பெரும் இழப்பைச் சந்தித்துவருகின்றன. அதற்கு அரசு, முதலீடு பெருமளவில் செய்ய வேண்டும். பொதுத் துறை வங்கிகள் போதுமான முதலீட்டைப் பெறவில்லையெனில், அவைகளால் சிறு தொழில் முதல் பெரிய நிறுவனங்களுக்குக் கடன் வழங்க இயலாது” என்றார்.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு முழுமையான நிதி ஒதுக்கப்படுவதில்லை. சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான நிலுவைத்தொகையை, தமிழ்நாடு இன்னும் பெறவில்லை. இதேபோல, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு இடம் பெறவில்லை. ஏற்கனவே, இத்திட்டத்தின் கீழுள்ள பணியாளர்களுக்கு ஊதியம் நிலுவையில் உள்ள நிலையில், இதைக் குறித்த அறிவிப்பு இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது எனக் கூறினார்.

Last Updated : Feb 2, 2021, 8:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details