தமிழ்நாடு

tamil nadu

’குடும்ப வன்முறை விண்ணப்பங்களை புகார்களாக கருதக்கூடாது'

By

Published : Jan 18, 2021, 4:16 PM IST

சென்னை: குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்களை புகார்களாக கருதக்கூடாது எனவும், இதில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

violence
violence

தேசிய, சர்வதேச பெண்கள் அமைப்புகள், தேசிய மகளிர் ஆணையம் ஆகியவற்றின் முயற்சியால், 2005 ஆம் ஆண்டு குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டு, 2006 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், இழப்பீடு, வசிப்புரிமை, பாதுகாப்பு கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில், இச்சட்டப்பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை ரத்து செய்யக்கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில், பாதுகாப்பு மீறல் மட்டுமே பிணையில் வெளிவர முடியாத குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இழப்பீடு கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும், உரிமையியல் சம்பந்தப்பட்டது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறி, விசாரணைக்கு உகந்ததற்ற இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக கூறினார்.

அதேசமயம், மனுதாரர்கள், நிவாரணம் கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும், இக்கோரிக்கைகளை 3 மாதங்களில் முடிக்கவும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், புகார்கள் அல்ல எனக் கூறிய நீதிபதி, இதில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராக கூறி சம்மன் அனுப்பக் கூடாது எனவும், நோட்டீஸ் மட்டுமே அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல, விண்ணப்பத்தில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பக் கூடாது எனவும், இயந்திரத்தனமாக செயல்படக்கூடாது எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுகவில் நிர்வாகிகள் நியமிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details