தமிழ்நாடு

tamil nadu

14 தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்!

By

Published : Jul 1, 2022, 6:51 PM IST

தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று(ஜூலை.01) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள், குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற நிகழ்விடத்திலேயே குற்றப் புலனாய்வாளர்களுக்கு அறிவியல்சார் சேவைகளை வழங்கி வருகின்றன. இதற்கென ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் குற்ற நிகழ்விடங்களை ஆய்வு மேற்கொண்டு தடயங்களைக் கண்டறியவும், தடய பொருட்களை ஆராய்ந்து குற்றம் எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என குற்றப் புலனாய்வாளர்களுக்கு அறிக்கை வழங்கவும், ஒரு உதவி இயக்குநர் பணிபுரிந்து வருகிறார்.

தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்

குற்ற நிகழ்விடத்திலேயே ஆரம்பகட்ட ஆய்வு மேற்கொள்ள ஏதுவாக ரூ.3,92,70,000/- செலவில் 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ரத்தக்கறை, வெடிபொருள், போதைப்பொருள், துப்பாக்கிச்சூட்டின் படிமங்கள் ஆகியவைகளை குற்ற நிகழ்விடத்திலேயே அடையாளம் காணுவதற்கான கருவிகளை கையாளுவதற்கும், எந்தவித வெளிப்புற மாசுபடுதலுக்கும் தடயப்பொருட்கள் உட்படாதவாறு ஆய்வு மேற்கொள்வதற்குரிய உட்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாகனங்கள் சென்னை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி மற்றும் திருப்பூர் மாநகர ஆணையரகங்கள், வேலூர், தர்மபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம், ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய காவல் மாவட்டங்களின் தடய அறிவியல் ஆய்வகப் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்படும்.

தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் சென்னையிலும், வட்டார தடய அறிவியல் ஆய்வகங்கள் கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், வேலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம் மற்றும் தர்மபுரி ஆகிய 10 இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.

14 உட்பிரிவுகளுடன் செயல்படும் தடயவியல் துறை:சென்னையில் உள்ள தலைமை ஆய்வகம் மானுடவியல், துப்பாக்கியியல், உயிரியல், வேதியியல், கணினி தடயவியல், மரபணுவியல், ஆவணம், வெடிபொருள், கலால் (மதுபானங்கள் தர ஆய்வு), போதைப்பொருள், இயற்பியல், மதுவிலக்கு, குருதிவடிநீரியல் மற்றும் நஞ்சியியல் ஆகிய 14 பிரத்யேக ஆய்வுப் பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.

இப்பிரிவுகளின் ஆய்வுகள் சர்வதேச தரத்திற்கு இணையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாத காலமாக இத்துறையின் தலைமை ஆய்வகத்தில் உள்ள அறிவியல்சார் மனிதவளம், உட்கட்டமைப்பு மற்றும் ஆய்வகத்தின் பல்வேறு தர ஆவணங்களைப் பிற மாநில தடய அறிவியல் வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்து தேசிய பரிசோதனை மற்றும் அளவு ஒப்புகை ஆய்வகங்களின் தர அங்கீகார அமைப்பு (National Accreditation Board for Testing, and Calibration of Laboratories) தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகத்திற்கு ISO/IEC 17025:2017 சர்வதேச தரச் சான்றிதழை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரிடம் இச்சர்வதேச தரச் சான்றிதழை தமிழ்நாடு தடய அறிவியல் துறை இயக்குநர் முனைவர் க. திருநாவுக்கரசு காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

இதையும் படிங்க:புரட்சி பயணத்தில் சசிகலா.. பினாமி சொத்துக்கள் முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details