தமிழ்நாடு

tamil nadu

கறுப்புப் பணத்தை மாற்றும்போது தகராறு: திமுக பிரமுகர் கைது

By

Published : Jan 7, 2022, 4:18 PM IST

ஜவுளி அதிபரிடம் உதவி செய்வதாகக் கூறி ஆட்களை வரவழைத்து ஒரு கோடி ரூபாய் பறிக்க முயன்ற திமுக பிரமுகரை சென்னை அண்ணாநகர் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கைது
கைது

சென்னை: திருப்பூர் மாவட்டம் தத்தன் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (46). இவர் திருப்பூரில் ஜவுளித் தொழில் செய்துவருகிறார். தொழிலதிபரான குமாருக்குச் சென்னை நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது.

சங்கர் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றித்தருவதாகவும், அதற்கு தரகுத்தொகை தர வேண்டும் எனவும் தொழிலதிபர் குமாரிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய குமார் ஐந்து கோடி ரூபாய் வெள்ளையாக மாற்றித் தருமாறு சங்கரிடம் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னை வருமாறு சங்கர் கூறியுள்ளார்.

இதையடுத்து குமார் தனது காரில் ஒரு கோடி ரூபாய் எடுத்துக்கொண்டு சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் விடுதிக்கு நேற்று முன்தினம் வந்தார்.

கைது

கறுப்புப் பணத்தைக் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டல்

இந்நிலையில், சாந்தி காலனியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய தனது நண்பரான விஜயகுமாரிடமிருந்து பணம் பெற்றுத் தருவதாகக் கூறி காரில் இன்று (ஜனவரி 7) அண்ணாநகர் அரசு மருத்துவமனை அருகே சங்கர், குமார் ஆகியோர் மதியம் 12 மணிக்குச் சென்று காத்திருந்தனர்.

அப்போது திடீரென இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல், குமாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி காரிலிருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றனர்.

குமாரின் கூச்சல் சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள் உடனடியாகச் சுற்றிவளைத்ததால் 10 நபர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இவர்களுடன் சங்கரும் தப்பியோட முயன்றபோது பொதுமக்கள் துரத்திப் பிடித்தனர்.

அண்ணாநகர் காவல் துறை விசாரணை

இதையடுத்து சங்கரை அண்ணாநகர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். காவல் துறை நடத்திய விசாரணையில் சங்கர் திருவிக நகர்ப் பகுதி பிரதிநிதி என்பதும், ஆட்களை வைத்து தொழிலதிபர் குமாரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தைப் பறிக்கத் திட்டம் போட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து சங்கரை காவல் துறையினர் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், சிசிடிவி காட்சிகளை வைத்துத் தப்பியோடிய நபர்களைக் கைதுசெய்யும் பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: விளையாட்டு வீரர்களுக்கு வாழ்வளிக்கும் சாதனை இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details