தமிழ்நாடு

tamil nadu

விவசாயி-யிடம் நிலத்தை அபகரித்தவருக்கு எதன் அடிப்படையில் ஜாமின் - உயர்நீதிமன்றம் கேள்வி?

By

Published : Oct 24, 2019, 7:07 AM IST

சென்னை: விவசாயி நிலத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்த நபர்களுக்கு, எதன் அடிப்படையில் சேலம் மாஜிஸ்த்ரேட் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

சேலம் மாவட்டம் நெய்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நடேசன். இவர், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம், மணி ஆகியோரிடம் நான்கு லட்ச ரூபாய்க் கடன் வாங்கி இருந்தார். இந்த கடனுக்கு ஈடாக தனக்குச் சொந்தமான, 3 ஆயிரத்து 68 சதுர அடி நிலத்திற்கான பொது அதிகார பத்திரத்தை மணி என்பவருக்கு எழுதிக் கொடுத்தார்.

ஆறு மாதங்களில் வட்டியுடன் கடனை திருப்பி செலுத்திய போதும், பொது அதிகார பத்திரத்தை ரத்து செய்யாமல், அந்நிலத்தை மணி தன் சகோதரர் சண்முகத்திற்கு விற்பனைப் பத்திரம் எழுதிக் கொடுத்திருந்தார். சண்முகம் அதை மோகன், ராஜ்வேல், ஜானகி ஆகியோருக்கு விற்பனை செய்தார். இதன் மூலம் தன்னை மோசடி செய்ததாகக் கூறி, 5 பேருக்கு எதிராகச் சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் செல்வம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சண்முகம், மணி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன் பிணை கேட்டு, மோகன் உள்ளிட்ட மற்ற மூன்று பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி சி.வி கார்த்திக்கேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 4 லட்சம் ரூபாய்க் கடன் கொடுத்து, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளை மோசடியாக விற்பனை செய்துள்ளதாகவும், பெரும் தொகை சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் பிரதான எதிரிகளான சண்முகம், மணிக்கு ஆகியோருக்கு சேலம் மாஜிஸ்ட்ரேட் ஜாமின் வழங்கி விட்டதாக அரசு தலைமை குற்றவியல் நடராஜன் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, மோசடி செய்த இருவருக்கும் ஜாமின் வழங்கியது குறித்து சேலம் மாஜிஸ்திரேட்டிடம் விளக்கம் பெறும்படியும், இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களைத் தாக்கல் செய்யவும், தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி கார்த்திகேயன், விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details