தமிழ்நாடு

tamil nadu

மனிதனின் மிருகத்தன்மை: பார்வையை இழந்த நாய்

By

Published : May 31, 2020, 6:01 PM IST

சென்னை: அரும்பாக்கத்தில் சுற்றித்திரிந்த நாயொன்றை 50 வயது நபர் ஒருவர் கொடூரமாக கல்லால் தாக்கி அதன் கண்ணை சேதப்படுத்தி இரக்கமற்ற செயலில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனிதனின் மிருகத்தன்மை: பார்வையை இழந்த நாய்
மனிதனின் மிருகத்தன்மை: பார்வையை இழந்த நாய்

நன்றிக்கு உதாரணமாக நாயை கூறும் மனிதர்கள், சில நேரங்களில் மிகவும் மிருகத்தன்மையோடு நடந்து கொள்வது இந்த சமூகத்தில் நிகழ்ந்து வரும் உச்ச கட்ட கொடுமைகளில் ஒன்றாக இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் ஊரடங்கால் நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்கள் உரிமையாளர்களிடமிருந்து கைவிடப்பட்டு உணவுக்கே மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதை நாம் செவிவழிச் செய்திகளாக கேட்டிருப்போம்.

இந்நிலையில், சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் வசித்து வந்த 10 வயது பெண் நாயை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல்லால் தாக்கிவிட்டதாக மே 25ஆம் தேதி விடியற்காலை 2 மணி அளவில் விலங்கு நல வாரியத்திற்கு தகவல் வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விலங்கு நல வாரியத்தினர், படுகாயமடைந்த நாயை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் நாய், பெரிய கல்லால் தாக்கப்பட்டதால் அதன் இரண்டு கண்களும் வெளியே வந்து தனது பார்வையை இழந்திருப்பது சிகிச்சையில் தெரியவந்தது.

பார்வையை இழந்த நாய்

பின்னர், விசாரணையில் நாயை தாக்கியவர் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் என்பதும் இதே போல் அங்கு வசிக்கும் சாலையோர மக்களையும் அடிக்கடி துன்புறுத்துவார் என்பதும் தெரியவந்தது. இதனால் உடனடியாக அந்த நபரை விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டம் ஐபிசி 428, 429 பிரிவு 290 கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல வாரிய அலுவலர் அஷ்வத் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உணவகங்கள், இறைச்சிக் கடைகள், குப்பை மேடுகள் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் அன்றாட உணவுக்கே அல்லல் படுபவைகள். பெரும்பாலான தெருநாய்கள் அடுத்தவர்களை சீண்டாமல் அவர்களிடமிருந்து ஒரு பிஸ்கட் துண்டை மட்டுமே எதிர்பார்க்கும். ஒரு பிஸ்கட் வழங்கினால் உடனே வாலை ஆட்டிக்கொண்டு நம்முடைய அன்புக்காக ஏங்கும். அப்படிப்பட்ட தெரு நாய்களை சிலர் கல்லால் அடித்து துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடுவது மனிதம் ஆகாது.

இதையும் படிங்க;

குரங்குகளுக்காக குரல் கொடுப்போம்...

ABOUT THE AUTHOR

...view details